• July 29, 2025
  • NewsEditor
  • 0

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் சூசைமரியாள்(80). இவரது பேரனை ஒரு வழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு நான்கு காவலர்கள் இன்று ஆதிகாலையில் வீட்டிற்கு சென்றுள்ளனர். பேரனை காவலர்கள் பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடியுள்ளார். இதற்கிடையே பேரனை ஏன் விரட்டுகிறீர்கள் என சூசைமரியாள் போலீஸாருக்கிடையே சென்றுள்ளார். அவரை தள்ளிவிட்டு போலீஸார் பேரனை பிடிக்க விரட்டியுள்ளனர். இதில் கீழே விழுந்த மூதாட்டி காயம் அடைந்தார். மூதாட்டியை அவரது மருமகள் சந்திரகலா 108 ஆம்புலன்ஸில் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர் அவர் மரணமடைந்ததாக கூறியுள்ளனர். மூதாட்டியை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கூறிவருகின்றனர்.

வீட்டில் விழுந்துகிடந்த மூதாட்டில்

இதுகுறித்து இறந்த மூதாட்டியின் மருமகள் சந்திரகலா கூறுகையில், “என் மகனை கைது செய்ய போலீஸார் இன்று அதிகாலை 5 மணியளவில் வந்தனர். அப்போது என் மகன் வீட்டிலிருந்து வெளியே ஓடினான். அவனை பிடிப்பதற்காக என் மாமியார் சூசை மரியாளை தள்ளிவிட்டுவிட்டு, அவர்மீது மிதித்தபடி போலீஸார் ஓடினர். இதில் சூசைமரியாள் கால் முட்டியில் ரத்தம் வந்தது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வேறு எங்காவது காயம் ஏற்பட்டதா என தெரியவில்லை. என் மகனும் எங்கு சென்றான் என தெரியவில்லை” என்றார்.

இறந்த மூதாட்டி சூசைமரியாள்

இந்த நிலையில் மூதாட்டி மரணத்துக்கு போலீஸ் காரணம் அல்ல என போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.  இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மறுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“28.07.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க நபரின் மனைவியின் புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டும், உறவினருக்கு அனுப்பியும் அப்பெண்ணை மிரட்டியதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் சென்றது. அந்த புகாரின் அடிப்படையில் கப்பியறை பகுதியை சார்ந்த வர்க்கீஸ் என்பவரின் மகன் சாகித் ஜெட்லி (20) மற்றும் நெய்யூர் பகுதியை சார்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி மீதும் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கின் எதிரிகளைத் தேடி சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் மத்திக்கோடு பகுதியில் உள்ள எதிரியின் வீட்டிற்கு இன்று (29.07.2025) காலை சுமார் 6 மணிக்கு சென்று விசாரித்தபோது எதிரி சாகித் ஜெட்லி வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அவ்விடத்திலிருந்து காவல்நிலையத்திற்கு திரும்பிவிட்டனர்.

காவல்துறை வெளியிட்ட அறிக்கை

இந்த வழக்கிலிருந்து எதிரிகளை பாதுகாக்கவும், அவர்களை விடுவிப்பதற்கு காவல்துறையினரை பயமுறுத்தும் நோக்கத்துடனும் காவலர்கள் மூதாட்டியை தாக்கியதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். இந்த தகவலை அக்குடும்பத்தினரும் அவர்களுக்கு துணையாக சிலரும் பரப்பி வருகின்றனர். மேற்படி பரப்பப்படும் செய்தியானது உண்மைக்கு புறம்பானது என்பதும் அவ்வாறு இந்த தவறான செய்தியை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *