
Doctor Vikatan: என்னுடைய தோழி அடிக்கடி சின்ன வெங்காயத்தை அரைத்துச் சாறு எடுத்துத் தலையில் தடவிக் குளிக்கிறாள். அது அவளுக்கு முடி வளர்ச்சிக்கு உதவுவதாகச் சொல்கிறாள். சின்ன வெங்காயச் சாற்றுக்கு வழுக்கைத் தலையில் கூட முடி வளரச் செய்யும் ஆற்றல் உள்ளதாகச் சொல்கிறார்களே… அது உண்மையா… எல்லோரும் இதைப் பின்பற்றலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகரும் அரோமாதெரபிஸ்ட்டுமான கீதா அஷோக்.
சின்ன வெங்காயச் சாறு தடவுவதால், ‘ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா’ (Androgenetic alopecia) எனப்படும் வழுக்கை பாதிப்பு சரியாகும் என்பதற்கு அறிவியல்ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. தவிர, தலையில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய்ப் பசையையும் வெங்காயச் சாறு அகற்றிவிடும். அதனால், மண்டைப்பகுதி வறண்டு போகும்.
தலையில் இயற்கையான எண்ணெய்ப்பசை இருப்பதுதான் ஆரோக்கியமானது. அது குறைந்து வறண்டுபோகும்போது முடி வறண்டு உதிரும். கூந்தலின் கறுப்பு நிறம் மாறி, செம்பட்டையாவதற்கும், நரைப்பதற்கும்கூட இது காரணமாகலாம்.
வெங்காயத்தில் சல்ஃபர் எனப்படும் கந்தகச்சத்து அதிகமிருக்கும். சின்ன வெங்காயத்தை பச்சையாக அரைத்து அதை அப்படியே தலையில் தடவும்போது முடி மெலியும், உடையும். வெங்காயச் சாற்றைத் தலையில் தடவி, மணிக்கணக்கில் ஊறி, பிறகு குளிக்கும்போது, கொத்துக் கொத்தாக முடி உதிரும். அதன் கடுமையான கந்தகத்தன்மை, முடியின் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.

சின்ன வெங்காயச் சாற்றையோ, விழுதையோ தலையில் தடவும்போது அளவுக்கதிக அரிப்பை உணர்வார்கள். சொரிந்து சொரிந்து மண்டைப்பகுதியே செதில் செதிலாகக் காணப்படும். வெங்காயத்தில் உள்ள அதிக கந்தகத்தன்மையின் காரணமாக, கண்களில் எரிச்சல், அரிப்பு, இமை முடிகள் உதிர்வது போன்றவையும் ஏற்படலாம்.
எனவே, இதுபோல கண்டது, கேட்டது, அடுத்தவர் செய்வது போன்ற விஷயங்களை அப்படியே கண்மூடித்தனமாக நம்பி பின்பற்றாமல், சரியான மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனை கேட்டு எதையும் செய்யுங்கள். கூந்தல் வளர்ச்சி என்பது ஆரோக்கியமான உணவுப்பழக்கம், ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை, சரியான தூக்கம் போன்றவற்றைப் பொறுத்தது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.