
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றத் தகவல் வெளியானதிலிருந்து காங்கிரஸ் முத்த தலைவர் பா.சிதம்பரத்தின் கேள்விகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
சமீபத்தில் பா.சிதம்பரம் அளித்தப் பேட்டி ஒன்றில், “பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்.ஐ.ஏ என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது? இந்தப் போரால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?” என்பது உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளை அடுக்கினார்.
பா.சிதம்பரத்தின் கருத்துக்கு பா.ஜ.க கடுமையான கண்டனங்களை தெரிவித்திருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தன் எக்ஸ் பக்கத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் அமித் மால்வியா, “மீண்டும் ஒருமுறை, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் ‘கிளீன் சீட்’ கொடுக்க முயற்சிக்கிறது.
நமது படைகள் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும், காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவின் எதிர்ப்பை விட இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு வழக்கறிஞர்களைப் போலவே பேசுகிறார்களே ஏன்? தேசியப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, எந்த சிக்கலும் இருக்கக்கூடாது என பா.ஜ.க கருதுகிறது.

ஆனால் காங்கிரஸைப் பொறுத்தவரை அப்படி இல்லை. அவர்கள் எப்போதும் எதிரியைப் பாதுகாக்க வளைந்துகொள்கிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பதிவுக்கு பதிலளித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத், “ போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே நிலைக்குக் கொண்டு வந்தீர்கள். பயங்கரவாதிகள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? பஹல்காம் கொலையாளிகள் உயிருடன் இருந்தால், ஒவ்வொரு இந்தியரும் வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.