
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசை பல்வேறு வகையில் சிக்கலில் ஆழ்த்தியிருக்கும் விவகாரங்களில் ஒன்று `ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதல். ஒருபக்கம் ‘இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பேசி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் காங்கிரஸ் முத்த தலைவர் பா.சிதம்பரம் தி குயின்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில், “பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் எங்கே? அவர்களை ஏன் கைது செய்யவில்லை. இன்னும் அவர்களை அடையாளம் கூட கண்டுபிடிக்கவில்லையே ஏன்? தாக்குதல் நடத்தியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சிலர் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது. அவர்களிடம் விசாரணை நடத்தினார்களா? அந்தத் தகவல் ஏன் வெளியாகவில்லை. அவர்களுக்கு என்னவானது?
பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) சிங்கப்பூர் சென்று சில தகவல்களைத் தரும் அறிக்கையை வெளியிடுகிறார். துணை ராணுவத் தலைவர் மும்பையில் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். இந்தோனேசியாவில், கடற்படையின் துணை அதிகாரி ஒருவர் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். இந்த ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் தொடர்புடைய அதிகாரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரியான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.
ஆனால் பிரதமரோ, பாதுகாப்பு அமைச்சரோ, வெளியுறவு அமைச்சரோ ஏன் விரிவான அறிக்கையை வெளியிடவில்லை? அரசாங்கம் எதை மறைக்க முயற்சிக்கிறது. இத்தனை வாரங்களாக NIA என்ன செய்தது? செய்கிறது? என்பதைக்கூட அவர்கள் வெளியிடாதது ஏன்?
பயங்கரவாதிகளை NIA அடையாளம் கண்டிருக்கிறார்களா? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? நமக்குத் தெரிந்தவரை, அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம்…
அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என எதன் அடிப்படையில் கருதுகிறீர்கள்? அதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? அதேப்போல, இந்தப் போரில் நமக்கு ஏற்பட்ட இழப்புகளையும் மறைக்கிறார்கள். எதுவானாலும் வெளிப்படையாகச் சொல்லுங்கள் என்றுதானே கேட்கிறோம்” என்றார்.