
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்ளவுள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்ட போது அவருக்கு லேசான தலைச் சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, காலை 10.50 மணியளவில் அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 24-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கூடுதல் பரிசோதனையில் அவருடை தலைசுற்றல் பிரச்சினைக்கு, அவரது இதய துடிப்பு சீரற்று இருந்ததே காரணம் என்பது தெரியவந்தது. இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவர் குழுவினர் முதல்வருக்கு இதய துடிப்பை சீராக்குவதற்கான சிகிச்சையை மேற்கொண்டனர்.