
மேட்டூர்: மேட்டூர் அணை முழு கொள்ளளவாக உள்ள நிலையில், காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் விநாடிக்கு 1,00,000 கன அடி வரை உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகவில் பெய்து வரும் மழையில் அங்குள்ள அணைகள் நிரம்பியதையடுத்து, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை நடப்பாண்டில் 4வது முறையாக நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது. பின்னர், 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு நேற்றிரவு 35,400 கன அடியாகவும், இன்று காலை 45,400 கன அடியாக இருந்த நிலையில் மதியம் 12 மணிக்கு 60,400 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 60,000 கன அடியிலிருந்து 75,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.