
” ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பொதுமக்களிடம் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது?” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுள்ளார்.
மதுரை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் பிரவீன் குமாரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது “மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் 16 நீர்நிலைகளில் தூர் வாராமல் உள்ளது. எப்போது வைகை ஆற்றில் தண்ணீர் வந்தாலும் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் வந்து சேரும். ஆனால், மேம்பாலம் கட்டுவதால் தண்ணீர் செல்லும் பாதை உடைக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் 1,296 கோடியில் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் இப்போது முடிந்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் முடியவில்லை. 88 மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு அதன் மூலமாக சோதனை ஓட்டம் செய்தால்தான் அந்தத் திட்டம் முழுமையாகும், என்னுடைய வீட்டிற்கே இப்போதுதான் பைப் லைன் போட்டுள்ளனர். அதுவும் பல இடங்களில் சரியாக செய்யவில்லை.

வைகை ஆறு அசுத்தமாக காணப்படுகிறது, குப்பை கொட்டப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். வைகை ஆற்றில் நிறைந்துள்ள ஆகாயத்தாமரைகள் சித்திரைத் திருவிழாவின் போது மட்டும் அகற்றப்படுகிறது, முழுக்க முழுக்க கழிவு நீர் கலக்கப்படும் வைகை, மீண்டும் புனித நீராக மாற்றப்பட வேண்டும், இதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை ஆற்றை சுத்தப்படுத்த தமிழக அரசிடம் நிதி இல்லை என்றால் மத்திய அரசிடம் நிதியை கேட்டு பெற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,
மாநகராட்சிகளுக்கான தரவரிசை பட்டியலில் மதுரை மாநகராட்சி 40-வது இடத்தில் உள்ளது வேதனை அளிக்கிறது, வரலாறு காணாத ஊழல் மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ளது. 200 திருமண மண்டபங்களுக்கு வீட்டு வரி போடப்பட்டுள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி வரி ஊழல் குறித்து தற்போதைய ஆணையாளர் எடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்,
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பொதுமக்களிடம் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது? ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு 45 நாட்களுக்குள் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மனுக்கள் வாங்கி வருகிறார்கள், கலைஞர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்ட பெண்களை மீண்டும் விண்ணப்பம் கொடுக்க சொல்லி இருக்கிறார், ஏற்கனவே நிராகரிக்கப்பட்டதற்கு தற்போது எப்படி உதவித்தொகை வழங்க முடியும்? உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பது திமுகவின் அரசியல் ஸ்டண்ட், மக்களுக்கு கொடுக்கும் அல்வா” என்றார்.