• July 27, 2025
  • NewsEditor
  • 0

பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள போதிகயா என்ற இடத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் உடற்பயிற்சி தேர்வு நடத்தப்பட்டது. அதில் 26 வயது பெண் மயக்கமடைந்தார். உடனே அவர் அங்கு நிறுத்தி இருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஆம்புலன்ஸில் இருந்தவர்கள் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்பெண் அரை மயக்கத்தில் இருந்தார்.

இதனால் அவர்களை எதிர்க்க முடியவில்லை. மருத்துவமனைக்கு சென்ற பிறகு அங்கிருந்த போலீஸார் மற்றும் டாக்டர்களிடம் தன்னை ஆம்புலன்ஸில் 3 முதல் 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து உடனே இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சிறப்பு விசாரணை குழுவிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர் வினய்குமார் மற்றும் ஆம்புலன்ஸில் இருந்த டெக்னீசியன் அஜித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் சென்ற வழித்தடம் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஊர்க்காவல் படையில் சேர வந்த பெண்ணை ஓடும் ஆம்புலன்ஸில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிராஜ் பஸ்வான், மாநிலத்தில் போலீஸாரின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் பல படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளது. பா.ஜ.க பிரமுகர், கிரிமினல், தொழிலதிபர் என பலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *