
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சின் போது பும்ரா 100 ரன்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார். அவருடைய கரியரிலேயே இப்போதுதான் முதல் முறையாக 100 ரன்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார்.
மான்செஸ்டரில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்களை எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி வலுவாக பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறது. இதுவரை 150 ஓவர்கள் முடிந்திருக்கிறது. இங்கிலாந்து அணி 615 ரன்களை எடுத்துவிட்டது.
கேப்டன் ஸ்டோக்ஸ் சதமடித்திருந்தார். இந்திய அணியின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவே இல்லை. பும்ராவே ரொம்பவே தடுமாறினார். ஜேமி ஸ்மித், டாசன் ஆகியோரின் விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தார். 33 ஓவர்களை வீசிய பும்ரா 112 ரன்களை இப்போது வரை கொடுத்திருக்கிறார்.

பும்ராவின் கரியரில் அவர் முதல் முறையாக 100 ரன்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார். இதற்கு முன் பார்டர் கவாஸ்கர் தொடரில் கடந்த டிசம்பரில் மெல்பர்னில் நடந்த போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 99 ரன்களை கொடுத்திருந்தார். இந்த இரண்டு முறைகளை கடந்து அவர் எப்போதுமே 90 ரன்களுக்கு மேல் கொடுத்ததில்லை.
இந்தத் தொடரில் பும்ராவைதான் இந்திய அணி பெரிதாக நம்பிக் கொண்டிருந்தது. ஆனால், முக்கியமான தருணங்களில் பும்ரா சொதப்பிக் கொண்டிருக்கிறார்.