
புராணக் கதைகளை மையப்படுத்தி ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு வடிவங்களில் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.
தற்போது விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை வதம் செய்வதையும், நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்வதையும் அனிமேஷன் திரைப்பட வடிவில் சொல்லியிருக்கிறார்கள்.
இதுவரை, கார்டூன் சேனல்களில் இது போன்ற புராணக் கதைகளை அனிமேஷன் வடிவில் சொல்லியிருக்கிறார்கள்.
இப்போது, இந்த ‘மகாவதார் நரசிம்மா’ அனிமேஷன் திரைப்படத்தை திரையரங்க வெளியீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
இப்படத்தை வெளியிடும் தயாரிப்பு நிறுவனமாக ‘ஹோம்பாலே ஃபிலிம்ஸ்’, ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்’ என யூனிவர்ஸ் வரிசையில் திரைப்படங்களை அடுத்தடுத்து வெளியிட முடிவு செய்திருக்கிறது.
இந்த ப்ராஜெக்ட்டின் அடுத்தப் பத்து ஆண்டுகால திட்டம் குறித்தான அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.
அரக்க சகோதரர்களான ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் விஷ்ணுவை அழிக்கத் துடிக்கிறார்கள். படத்தின் முதல் பாதியிலேயே வராக அவதாரமெடுத்து ஹிரண்யாக்ஷனை வதம் செய்கிறார் விஷ்ணு.
தனது சகோதரனை கொன்ற விஷ்ணுவை அழிக்க பிரம்மனிடம் கடும்தவம் புரிந்து தன்னை யாராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெறுகிறார் ஹிரண்யகசிபு.
ஆனால், ஹிரண்யகசிபுவின் மகன் பிரகலாதன் விஷ்ணுவின் தீவிர பக்தனாக இருப்பதால் அவனை வெறுத்து பல்வேறு வழிகளில் பிரகலாதனை கொல்ல முயற்சிகள் செய்கிறார்.

அனைத்து முயற்சிகளிலும் பிரகலாதனை விஷ்ணு காப்பாற்றுகிறார்.
தன்னை அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் ஹிரண்யகசிபுவை விஷ்ணு நரசிம்ம அவதாரமெடுத்து வதம் செய்வதே இந்த அனிமேஷன் படத்தின் கதை.
விஷ்ணு அவதாரத்தின் இந்த இரண்டு பகுதிகளை மட்டும் இந்தப் பாகத்தில் தொட்டிருக்கிறார்கள்.
இது போன்ற புராணக் கதைகளை நாம் படிக்கும்போது கதாபாத்திரங்களின் உருவங்கள் நமக்குள் தோன்றியிருக்கும்.
அப்படி விஷ்ணுவின் நரசிம்ம அவதாரம், வராக அவதாரம், ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு ஆகியோரின் கதாபாத்திரங்களுக்கு சிறந்ததொரு அனிமேஷனில் உருவம் கொடுத்திருக்கிறார்கள்.
அதுபோல, யுத்தம், ஹிரண்யகசிபுவின் சாம்ராஜ்யம் என அனைத்தையும் அனிமேஷன் ஃப்ரேமில் பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த அனிமேஷன் உலகத்தை வடிவமைத்த விதமும், அவற்றின் வண்ணங்களும் 3D-யில் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

இந்த அனிமேஷன் உலகத்தை கட்டியெழுப்ப கிராபிக்ஸுக்கு பெரும் உழைப்பைச் செலுத்தி நல்லதொரு அவுட்புட்டையே கொடுத்திருக்கிறது படக்குழு.
இந்திய அனிமேஷன் திரைப்பட வரலாற்றில் இந்த ‘மகாவதார் யுனிவர்ஸ்’ குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெறும். அதே சமயம், யுத்தக் காட்சிகளின் ஓரிரு இடங்களில் கிராபிக்ஸ் தரத்தை இன்னும் மெருகேற்றியிருந்தால் முழுமையான அனுபவத்தைக் நம் விழிகளுக்குக் கொடுத்திருக்கும்.
ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியாக பவர்ஃபுல் பின்னணி இசையைக் கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ஸுக்குப் பாராட்டுகள்! ஆனால், பாடல்களில் கொஞ்சம் ஏமாற்றமே!
விஷ்ணு, வராக அவதாரம் மற்றும் நரசிம்ம அவதாரமெடுக்கும் கதையைத் திரைப்பட வடிவிற்கேற்ப தேர்ந்த கதையாகக் கோர்த்திருக்கிறார்கள்.
எழுத்திலும், நீண்ட புராணக் கதையை திரைமொழிக்கேற்ப முதற்பாதியில் வராக அவதாரம், இரண்டாம் பாதியில் நரசிம்ம அவதாரம் என தனித்தனியாக அடுக்கி, பாராட்ட வைக்கிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் ஜெயபூர்ணா தாஸ், அஷ்வின் குமார், ருத்ர பிரதாப் கோஷ்.

இப்படியான புராணக் கதைகள் பற்றிப் பெரிதும் பரிச்சயமில்லாதவர்களுக்கும், இன்றைய ஜென்-சி பார்வையாளர்களுக்கும் புரியும் வகையில்தான் இந்த அனிமேஷன் படத்தில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஷ்வின் குமார்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிமையாக புரிய வைக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட தமிழ் டப்பிங் வசனங்களும் கவனம் பெறுகின்றன.
நாம் ஏற்கெனவே பல வடிவங்களில் பார்த்த, படித்த கதையாக இருந்தாலும் இந்த அனிமேஷன் உலகம் உங்களை நிச்சயமாக ஆச்சரியமூட்டும். குழந்தைகளோடு ஜாலியாகப் போயிட்டு வாங்க மக்கா!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…