
நீதி தாமதமாக நிலைநாட்டப்படும் வழக்குகளை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட ஒரு கவனிக்கத்தக்க வழக்கில் கல்லூரி படிக்கும்போது செய்த குற்றத்துக்காக குற்றவாளிக்கு 67 வயதில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டை என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கியிருக்கிறது.
1979ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள லோக்மான்யா கல்லூரி மாணவர்கள் இருவரிடையே யூனியன் தேர்தல் தொடர்பான மோதல் ஏற்பட்டுள்ளது.
அதில், 21 வயது ஹரி சங்கர் ராய் என்பவர், 19 வயது கிருஷ்ண குமார் என்ற நபரைக் கத்தியால் குத்தியிருக்கிறார்.
1983 ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் ஐபிசி பிரிவு 304-I இன் கீழ் ராய் குற்றவாளி என்று கண்டறிந்து அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
இந்த தண்டனை கொலைக்கு சமமானதல்ல என்பதால், ராய்க்கு கொலைக் குற்றத்துக்கான தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் உத்தரபிரதேசம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ராய் தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.
41 ஆண்டுகள் வழக்கு நடத்தி, இறுதியாக கடந்த ஆண்டு ஹரி சங்கர் ராய் கொலைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது உயர் நீதிமன்றம். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ராய்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கொலைக் குற்றத்துக்கான பிரிவு 302 என்றாலும் பிரிவு 304-I என்றாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியது நீதிமன்றம்.
“ஒரு நபர் தனது உயிரை இழந்திருக்கிறார். எந்த பிரிவாக இருந்தாலும் அதற்கு போதுமான தண்டனை வழங்கப்பட வேண்டும்.” என்றார் நீதிபதி கவாய்.
ராயின் வழக்கறிஞர், குற்றவாளி தற்போது வயதாகி நோய்களால் அவதிப்படுவதாகவும், அவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவருக்கு தொடர் கண்காணிப்பு தேவைப்படுவதாகவும் அதற்காக நீதிமன்றம் கருணை காட்ட வேண்டும் என்றும் மன்றாடினார்.
ஆனால் நீதிமன்றம் உறுதியாக அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மேலும் நியாயமான உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதால் கருணை கூற மன்றாடுவது மனுவை தள்ளுபடி செய்ய வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார். அப்படி தள்ளுபடி செய்யப்பட்டால் ஆயுள் தண்டணை வழங்கப்படலாம்.
மேலும் தலைமை நீதிபதி கவாய், “நீங்கள் ஒப்புக்கொண்டால், பிரிவு 302 இன் கீழ் உள்ள தண்டனையை பிரிவு 304-I (கொலைக்கு சமமானதல்லாத குற்றவியல் கொலை)-ன் கீழ் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் மாற்றுவோம்.” என்ற வாய்ப்பை வழங்கினார். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.