
கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (30). இவர் கட்டுமானப் பணியில் சித்தாளாக பணியாற்றி வருகிறார். தமிழரசிக்கும், ரகுபதி (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு அபர்ணா ஶ்ரீ (4) என்ற ஒரு பெண் குழந்தை இருந்தார். கணவன் – மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழரசி ரகுபதியை பிரிந்து குழந்தை அபர்ணாஶ்ரீயுடன் தனியாக வசித்து வந்தார்.
குழந்தை அபர்ணாஶ்ரீ நேற்று மதியம் திடீரென வாந்தி எடுத்து, மயக்கம் அடைந்ததாக தமிழரசி உறவினர்களிடம் கூறியுள்ளார். குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்தனர்.
அதில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில் குழந்தை அபர்ணாஶ்ரீயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் எழுப்பினர். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் தமிழரசிக்கு அவருடன் கட்டிட வேலை செய்து வரும் வசந்த் (33) என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி தமிழரசியின் வீட்டுக்கு வசந்த் அடிக்கடி சென்றுள்ளார்.

தங்கள் உறவுக்கு குழந்தை அபர்ணாஶ்ரீ தொந்தரவாக இருப்பதாக கூறி, தமிழரசி தன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக சிங்காநல்லூர் காவல்துறையினர் தமிழரசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.