
ஹரியானாவில் பாஜக எம்.பி சுபாஷ் பரலாவின் மகன் விகாஷ் பரலாவை அம்மாநில அரசு துணை அட்வகேட் ஜெனரலாக நியமித்திருக்கிறது.
இந்த விகாஷ் பரலா, காரில் பெண் ஒருவரை துரத்திச் சென்று தொந்தரவு செய்த விவகாரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டவர். இதனால் விகாஷ் பரலாவின் நியமனம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகள் 2017 -ல் ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று காரில் சென்று கொண்டிருக்கையில், இன்னொரு காரில் வந்த விகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் அந்த பெண்ணின் காரை துரத்தி அவரை வழிமறித்து தொந்தரவு செய்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் விகாஷ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் சிறையிலும் இருந்தார். அதன்பிறகு பெயில் கிடைக்கவே சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டார். ஆனால், இன்னமும் அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில்தான் விகாஷ் பரலாவை இப்போது அம்மாநிலத்தின் துணை அட்வகேட் ஜெனரலாக நியமித்திருக்கிறார்கள். இந்த நியமனம் பலத்த விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
“நீதி வேண்டி நிறைய அலைக்கழிப்புகளை எதிர்கொண்டுவிட்டேன். நிறைய காலம் காத்திருந்து விட்டேன். ஆனால், இன்னமும் எனக்கு நம்முடைய நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது.” என பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார்.