
மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 23-ம் தேதி தமிழக அரசு சார்பில் இராஜேந்திர சோழன் திருவாதிரை விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சாரத்துறை சார்பில் கொண்டாடப்படுகிறது. அதன் நிறைவு நாள் விழா நாளை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதனால் அரியலூர் மாவட்டம் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் அமைந்துள்ள பகுதி முழுவதும் போலீஸார் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
உச்சகட்ட பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வரும் போலீஸார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி வருகையால் கங்கை கொண்ட சோழபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவு நேரத்தில் கோயில் மின்னொளியில் ஜொலிக்கிறது. தூத்துக்குடியில் இருந்து இன்று இரவு திருச்சி வரும் மோடி அங்குள்ள நட்ச்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்குகிறார்.
பின்னர் நாளை காலை சுமார் 11 மணியளவில் திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் புறப்படுகிறார். இதற்காக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிலரிடம் பேசினோம், “தமிழக அரசு இராஜேந்திர சோழன் திருவாதிரை விழாவை கடந்த 23-ம் தேதி தமிழக அரசு நடத்தியது. இதைதொடர்ந்து மத்திய அரசு தனியாக ஐந்து நாள்கள் விழா எடுத்து வருகிறது. இந்த விழாவில் பிரதமர் கோடி கலந்து கொள்வதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாளை காலை சுமார் 11.50 மணியளவில் பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார்.
கோயிலில் வழிபாடு செய்த பிறகு கோயிலை பார்வையிடும் மோடி, பின்னர் கோயில் வளாகததில் அமைக்கப்பட்டுள்ள விழா பந்தலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதற்காக விழா பந்தல் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.கவினர் மற்றும் பொதுமக்கள் 1,200 பேர், 200 வி.ஐ.பி, 31 துறவிகள் மற்றும் ஓதுவார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடப்பது விழாவின் ஹைலைட்டாக அமையும் என்கிறார்கள்.
திருச்சி விமான நிலையத்திற்கு இராஜேந்திர சோழனின் பெயரை சூட்ட வேண்டும், நெதர்லாந்தில் உள்ள ஆனைமங்கலம் செப்பேட்டை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு கோரிக்கைகள் ஏற்கெனவே பிரதமர் மோடியிடம் வைக்கப்பட்டதாம். திருச்சி விமான நிலையத்திற்கு இராஜேந்திர சோழன் பெயரை அறிவிப்பதற்கான வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரை கங்கை கொண்ட சோழபுரத்தில் மோடி இருப்பார்” என்றனர்.