
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து தனியாக பாட்டி வீட்டுக்கு நடந்துச் சென்றார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவன், சிறுமியை வலுகட்டாயமாக அருகில் உள்ள மாந்தோப்புக்கு தூக்கிச் சென்று சொல்ல முடியாத அளவுக்கு பாலியல் சித்ரவதைகளை செய்தான்.
வலி தாங்க முடியாத சிறுமி, தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியிருக்கிறாள். ஆனால் ஈவு இரக்கமற்ற அந்த இளைஞன், சிறுமியை மிரட்டி தன்னுடைய வக்கிரத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறான்.
இந்தச் சயமத்தில் இளைஞனுக்கு போன் அழைப்பு வந்திருக்கிறது. அந்த நேரத்தில் சிறுமி அங்கிருந்து தப்பி ஓடி வந்திருக்கிறாள்.
பின்னர் நடந்த சம்பவத்தை சிறுமி குடும்பத்தினரிடம் கூறி கதறி அழுதிருக்கிறார். சிறுமி கூறிய இடத்துக்கு அவரின் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது அந்த இளைஞன் அங்கு இல்லை. பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
பின்னர் போக்சோ வழக்கு என்பதால் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு போலீஸார் விசாரித்து வந்தனர்.
சம்பவம் நடந்து பத்து நாள்களுக்கு மேலாகியும் குற்றவாளியை போலீஸார் பிடிக்க முடியவில்லை. அதனால் சிசிடிவி கேமராவில் சிக்கிய குற்றவாளியின் உருவபடத்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு போலீஸார் வரைந்து அதை தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நோட்டீஸ் அச்சடித்த போலீஸார், இவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தனர்.
ஆனாலும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி தேவராணி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி விவேகானந்தா சுக்லா ஆகியோர் மேற்பார்வையில் பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்தச் சூழலில்தான் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞன் ஒருவர் பதுங்கியிருக்கும் தகவல் தனிப்படை போலீஸாருக்கு நேற்று கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் அந்த இளைஞனிடம் விசாரித்தனர். அப்போது ஏ.ஐ தொழில்நுட்பத்தில் வரைந்த குற்றவாளியின் உருவத்துடன் அந்த இளைஞரின் உருவமும் ஒத்துப்போனது.
உடனடியாக அவனை செல்போனில் படம் பிடித்த தனிப்படை போலீஸார், அதை கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த இளைஞனின் போட்டோவை சிறுமியிடம் காண்பித்த போது `இவன்தான்’ என அவள் கூறினாள்.
அதனால், சூலூர்பேட்டையிலிருந்து அந்த இளைஞனை போலீஸார் கும்மிடிப்பூண்டிக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையில் குற்றவாளி சிக்கிவிட்டான் என்ற தகவல் ஆரம்பாக்கம் பகுதி முழுவதும் காட்டு தீ போல பரவியது.
உடனடியாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு நூற்றுக்கும்மேற்பட்டவர்கள் குவிந்தனர். அதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதோடு குற்றவாளி என கருதப்படும் இளைஞனை வேறு ஒரு காவல் நிலையத்துக்கு தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் ஐஜி அஸ்ரா கர்க், நிருபர்களிடம் கூறுகையில், “எங்களின் முதற்கட்ட விசாரணையில் அசாமைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் சிக்கியிருக்கிறான். அவனின் போட்டோவை சிறுமிக்கு அனுப்பி அவன்தான் குற்றவாளியா என விசாரித்து வருகிறோம். சிக்கிய நபரின் முழு விவரம் குறித்து 8 டி.எஸ்.பிக்கள் கொண்ட குழு விசாரித்து வருகிறது” என்றார்.
தனிப்படை போலீஸாரிடம் விசாரித்தபோது, “பிடிப்பட்ட இளைஞன், முதலில் பஞ்சாப் என கூறினான். அதன்பிறகு அசாம் என்று சொல்கிறான். அதனால் அவன் குறித்து விசாரித்து வருகிறோம். சூலூர்பேட்டையில் உள்ள தாபா ஒன்றில் அவன் பணியாற்றி வருகிறான் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அவனிடமிருந்து செல்போன் ஒன்றைப் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம்” என்றனர்.
13 நாள்களாக போலீஸாருக்கு தலைவலியாக இருந்த சிறுமி போக்சோ வழக்கின் குற்றவாளி சிக்கியிருப்பதால் திருவள்ளூர் மாவட்ட போலீஸார் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.