
பாலிவுட் நடிகை ருச்சி குஜார், `தயாரிப்பாளர் கரண் சிங் செளகான் என்பவர் ரூ.24 லட்சம் மோசடி செய்துவிட்டதாக’ போலீஸில் புகார் செய்துள்ளார். இதையடுத்து மும்பை ஓசிவாரா போலீஸார் தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ருச்சி குஜார் தான் கொடுத்துள்ள புகாரில், ”கரண் சிங் செளகான் என்னிடம் முதன் முதலில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டார்.
அவர் தன்னிடம் இந்தி சீரியல் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும், அது சோனி டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதில் தன்னையும் இணை தயாரிப்பாளராக சேரும்படி கேட்டுக்கொண்டார். அவரது பேச்சை நம்பி கரண் சிங் செளகானின் கே ஸ்டூடியோ நிறுவனத்திற்கு 2023-24ம் ஆண்டில் பல்வேறு காலக்கட்டங்களில் 25 லட்சத்தை டிரான்ஸ்பர் செய்தேன்.
இது தொடர்பாக அவர் தேவையான ஆவணங்களை அனுப்பி ஒப்பந்தமும் செய்து கொண்டார். ஆனால், கரண் சிங் செளகான் சொன்னபடி இந்தி சீரியல் தயாரிக்கவில்லை. நான் கொடுத்த பணத்தை கொண்டு So Long Valley என்ற படத்தை தயாரித்துள்ளதை பின்னர் தெரிந்து கொண்டேன்.
அப்படம் 27-ம் தேதி வெளியாவதாக கேள்விப்பட்டு நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டேன். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் மிரட்டினார்” என்று தெரிவித்தார்.
பணம் டிரான்ஸ்பர் செய்த வங்கி விபரங்களையும் ருச்சி போலீஸில் தாக்கல் செய்துள்ளார். So Long Valley படத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு திரையிட்டு காட்ட கரண் சிங் செளகான் திட்டமிட்டு இருப்பதாக ருச்சி குஜாருக்கு தெரிய வந்தது.
சினிபோலிஸ் தியேட்டரில் இப்படம் திரையிடப்பட இருந்தது. உடனே ருச்சி குஜார் மேலும் சிலரை அழைத்துக்கொண்டு போராட்டம் நடத்துவதற்காக சென்றார். அங்கு கரண் சிங் செளகானுடன் ருச்சி குஜாரும், அவருடன் வந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் தயாரிப்பாளரின் புகைப்படத்துடன் கூடிய பேனர்களை கையில் வைத்தபடி போராட்டம் நடத்தினர். அவ்வாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது ருச்சி குஜார் கோபத்தில் கரண் சிங் செளகானை அடிப்பதற்கு பதில் மற்றொரு தயாரிப்பாளரான மான் சிங் என்பவரை தனது செருப்பால் அடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.