
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாதது தனது தவறுதான் என்றும் கட்சியின் தவறில்லை என்றும் கூறியுளார். மேலும், தற்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் தனது தவறை சரிசெய்வதாகவும் கூறியுள்ளார்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பை சுட்டிக்காட்டிய அவர், அது சமூக தரவு சேகரிப்புக்கு ஒரு மாதிரியாக அமைந்துள்ளதாகவும், கண்ணுக்குத் தெரியாத அரசியல் பூகம்பத்தைக் கிளப்பியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் OBC மாநாடு “பாகிதாரி நியாய சம்மேளனில்” கலந்து கொண்ட ராகுல் காந்தி, தனது 21 வருட அரசியல் வாழ்க்கையில் ஏழைகள், எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் பிரச்னைகளில் அவர் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருப்பதாகவும் பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் விஷயத்தில் சறுக்கியிருப்பதாகவும் பேசியுள்ளார்.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி.வேணுகோபால், சித்தராமையா, அசோக் கெலாட், சச்சின் பைலட், பூபேஷ் பாகேல், கவுரவ் கோகோய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
“ஆர்.எஸ்.எஸ் தான் உண்மையான எதிரி” – Rahul Gandhi
“ஓபிசி பிரிவுகளைப் பாதுகாக்க வேண்டிய ஒரு விஷயத்தில் நான் தவறிழைத்ததை என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது, நான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை. காரணம், அந்த நேரத்தில், உங்கள் பிரச்னைகளை நான் ஆழமாகப் புரிந்து கொள்ளவில்லை.
அதற்காக நான் வருந்துகிறேன், இப்போது உங்கள் வரலாற்றையும் பிரச்னைகளையும் நன்றாக புரிந்துகொண்டுள்ளேன். அந்த தவறைச் சரிசெய்யப்போகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், “தலித்துகள் மற்றும் பழங்குடியினர் எதிர்கொள்ளும் சவால்களை அவர்களின் வரலாற்றை வைத்துப் புரிந்துகொள்வது எளிது, ஆனால் ஓபிசி மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மறைக்கப்பட்டவையாக உள்ளன.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால், இப்போது தெலுங்கானாவில் நடத்தப்பட்டுள்ளதைப் போல சமூகத்தின் எக்ஸ் ரே-வாக தரவுகள் கிடைத்திருக்காது என்றும் ராகுல் கூறினார்.
மேலும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஓபிசி மக்களின் வரலாற்றை அளித்துவிட்டதாக ராகுல் காந்தி பேசியுள்ளார். “இதை உணரும் போது ஆர்.எஸ்.எஸ் உங்கள் உண்மையான எதிரி என்பதை அறிவீர்கள்” என்றார்.
மோடி ஒரு பெரிய பிரச்னை இல்லை!
மேலும் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி வெறும் காட்சிப்பொருள்தான் என்றும் எந்த சரக்கும் இல்லாதவர் என்றும் கூறினார். மோடியுடன் சில சந்திப்புகள் மற்றும் சில அறைகளில் நேரம் செலவிடப்பட்டபிறகு அவர் ஊடகத்தால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட பலூன் எனத் தெரியவந்ததாகப் பேசியுள்ளார்.
“நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்களே உங்கள் மனதில் அவரைப் பெரிதாக்கியிருக்கிறீர்கள். அவர் ஒன்னும் பெரிய பிரச்னை இல்லை” என்றார் ராகுல்.
மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “மோடி குஜராத் பிரதமராக இருந்தபோது, தனது சமூகத்தை ஓபிசி பட்டியலில் சேர்த்ததன் மூலமே ஓபிசி பிரிவினரானார்” எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.