
புதுடெல்லி: கார்கில் வெற்றி தினமான ‘கார்கில் விஜய் திவாஸின்’ 26-வது நினைவு நாளில், போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும், உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று 26-வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம், ‘கார்கில் விஜய் திவாஸ்’ என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.