
தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து இயக்கும் படம், ‘ஸ்பிரிட்’. இதில் இந்தி நடிகை தீபிகா படுகோன் முதலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், தினமும் எட்டு மணி நேரத்துக்கு மேல் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்பதால் அதிலிருந்து வெளியேறினார். இந்த விவகாரம் இந்தி சினிமாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து புதிதாகக் குழந்தை பெற்றுள்ள தாய்மார்களுக்கு சினிமாவில் வேலை நேரம் குறித்து விவாதம் எழுந்துள்ளது.
நடிகை வித்யா பாலனிடம் இதுகுறித்து கேட்டபோது, “எனக்கு ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்வதிலோ அல்லது படப்பிடிப்புக்காக வேறு லொகேஷனுக்கு பயணம் செல்வதிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் புதிதாகக் குழந்தை பெற்றுள்ள தாய்மார்கள் அவ்வாறு செய்ய முடியாது. அவர்களுக்குக் குழந்தைகளைப் பராமரிக்கும் அவசியம் இருப்பதால் அதற்கு ஏற்ப வேலை நேரம் வேண்டும். அது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். இதற்காக ஒவ்வொரு துறையும் சில நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.