
மதுரையில் 2018 பிப்ரவரியில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய திரைக் கலைஞர் கமல்ஹாசன், தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களான முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத அரசியல் களத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளையும் எதிர்த்து தனித்து களமிறங்கினார்.
அந்தத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி 2.62 சதவிகித வாக்குகள் பெற்றது. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வெறும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோற்றார்.
அதன்பின்னர், 2023-ல் ஈரோடு கிழக்குக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்த கமல்ஹாசன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ராஜ்ய சபா எம்.பி சீட் ஒப்பந்தத்துடன் திமுக கூட்டணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில், ராஜ்ய சபாவில் தமிழக எம்.பி-க்கள் ஆறு பேரின் பதவிக்காலம் நேற்றோடு முடிவடைந்த நிலையில், தி.மு.க ஆதரவில் இன்று ராஜ்ய சபாவில் எம்.பி-யாக தமிழில் பதவியேற்றார் கமல்ஹாசன்.
அதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவரின் மகளும், திரைக் கலைஞருமான ஸ்ருதிஹாசன் அவருக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் தனது முகநூல் பக்கத்தில் தந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “துணிச்சலான புதிய உலகத்தை நோக்கிய உங்களின் பயணத்தை இன்றைய நாள் குறிக்கிறது.
இன்று ராஜ்ய சபாவில் வலிமையுடனும், உற்சாகத்துடனும் அவையில் எதிரொலிக்கும் வகையில் உங்களுக்கே உரிய குரலில் நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்ததைப் பார்த்தது என்றென்றும் என் மனதில் பதிந்த ஒரு தருணம்.
எப்போதும் போல, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும் அடையவும் நான் விரும்புகிறேன்.” என்று பதிவிட்டிருக்கிறார்.