• July 26, 2025
  • NewsEditor
  • 0

ம்புலன்களில் ஒன்றான காது, கேட்பதற்கு மட்டுமல்ல… நம் உடலைச் சமநிலையில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காது குறித்த அக்கறையும் அதைப் பற்றிய அடிப்படைப் புரிதலும் இந்த ஸ்மார்ட்போன் உலகத்தில் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரிய விஷயமே!

இப்படி நம் செயல்பாடுகளாலோ, மரபியல் காரணங்களாலோ சாதாரணமாக காதுவலி என ஆரம்பித்து, காது கேளாமை வரையிலும் பிரச்னைகள் நீளும் அபாயம் இருக்கிறது எச்சரிக்கிற காது, மூக்கு மற்றும் தொண்டை சிகிச்சை நிபுணர் நீரஜ் ஜோஷி, காதுகளில் வரக்கூடிய பிரச்னைகள், காது கேளாமைக்கான காரணங்கள், சொட்டுமருந்து, எண்ணெய் போன்றவற்றை காதில்விடுவது சரியா, காது கேளாமையைச் சரி செய்வதற்கான சிகிச்சைகள் என்னென்ன, காதுகளைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியவை என விரிவாக பேசியிருக்கிறார்.

Ear Health

காதில் கொப்பளம் தோன்றுவது, சீழ் வடிவது, அழுக்கு அடைத்துக்கொள்வது, பூச்சி புகுவது, காதில் அடிபடுவது போன்றவை முக்கியமானவை.

இவற்றோடு, மூக்கில் சளி பிடிப்பது, மூக்கு ஒழுகுவது போன்ற மூக்குப் பிரச்னைகளால்கூட காதுவலி வரும். தொண்டையில் சளி பிடித்துப் புண் உண்டாவது, டான்சில் வீங்குவது போன்றவையும் காதுவலிக்குக் கம்பளம் விரிக்கும்.

காதுவலிக்கான காரணத்தைக் கண்டறிந்து சரியான சிகிச்சை பெற்றால் குணம் பெறலாம். குறிப்பாகக் காதில் சீழ் வடிந்தால், கேட்கும் திறன் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், ஆரம்பத்திலேயே, இதற்குச் சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.

அதேபோல், `காதிலுள்ள அழுக்கைச் சுத்தம் செய்கிறேன்’ எனக் கூரான ஆயுதங்களை உபயோகிப்பது ஆபத்தில் முடியும். நம் காதுக்குள் `செரிமோனியஸ் சுரப்பிகள்’ (Ceremonious Glands) உள்ளன.

இவைதான் காதுக்குள் ஒருவிதத் திரவத்தைச் சுரந்து, மெழுகுப் படலத்தை உருவாக்கி, செவிப்பறையைப் பாதுகாக்கின்றன. காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், பொருள்கள் போன்றவை செவிப்பறையைப் பாதித்துவிடாதபடித் தடுப்பது, இந்த மெழுகுதான். இதை அகற்றவேண்டிய அவசியமில்லை. தானாகவே இது வெளியில் வந்துவிடும்.

Ear Health
Ear Health

பொதுவாக, நம் காது எப்போதுமே உலர்ந்த தன்மையுடன் இருக்கவேண்டிய உறுப்பு. காதுக்கு நன்மை செய்யும் என அதில் எண்ணெய், சொட்டு மருந்து என்று எதையாவது ஒன்றை ஊற்றி ஈரமாக வைத்திருந்தால், காற்றில் கலந்துவரும் பூஞ்சைக் கிருமிகள் (Fungal Infection) காதில் உள்ள ஈரப்பதத்தால் ஒட்டிக்கொண்டு, அரிப்பை ஏற்படுத்தும். காது அடைத்த மாதிரித் தோன்றும். அதோடு, காதுவலி, காதில் சீழ் வடிவது என்று பிரச்னைகள் தொடரும். இது காது கேளாமை வரை பிரச்னையைக் கொண்டுபோய்விடும். ஆகவே, சொட்டு மருந்து, எண்ணெய் போன்றவற்றைக் காதில்விடவேண்டிய அவசியம் வந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே விடவேண்டும்.

காது கேளாமைக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, ஒலி அலைகள் காதுக்குள் சென்றடைவதில் பிரச்னை உண்டாவது. மற்றொன்று, ஒலி மின்னலைகள் மூளைக்குள் செல்வதில் ஏற்படும் பிரச்னை.

சிலருக்குக் காதுப் பிரச்னையால் தள்ளாட்டம், தலைசுற்றல் போன்றவை வரலாம். காதுக்குள்ளே மணி அடிப்பது போன்ற சத்தம் கேட்கும்.

Ear care
Ear care

காக்ளியா (Cochlea) அல்லது காது நரம்புகளில் வீக்கம், காது சவ்வில் ஏற்படும் ஓட்டை, சீழ் வடிதல் போன்றவற்றைக் கவனிக்காமல்விடுவது, அதிக இரைச்சலால் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் காது கேளாமை வரலாம்.

வயது முதிர்ச்சி காரணமாக, சிலருக்குக் கேட்டல் குறைபாடு வரலாம். சிலருக்கு ‘காக்னிடிவ் டிக்ளைன்’ என்கிற முதுமையின் காரணமாக, ஞாபகமறதியால் காது கேட்கும் திறன் குறையும்.

விமான நிலையம், தொழிற்சாலைகள் போன்ற சத்தம் மிகுந்த இடங்களில் வேலை செய்பவர்களுக்குக் காது கேளாமை பிரச்னைக்கான வாய்ப்பு அதிகம். இதைத் தடுக்க, காதில் பஞ்சை வைத்துக்கொள்ளலாம் அல்லது `இயர் பிளக்’ (Ear Plug) பொருத்திக்கொள்ளலாம்.

சிலருக்கு நடுக்காதிலுள்ள எலும்பு பாதிக்கப்படும்போது (Otosclerosis) காது கேட்காது. இதைக் குணப்படுத்த ‘ஸ்டெபிடெக்டமி’ (Stapedectomy) எனும் அறுவைசிகிச்சை இருக்கிறது.

தாயின் கர்ப்ப காலத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ உறவுக்குள் திருமணத்தினாலோ பிறவியிலேயே காது கேளாமல் போகலாம்.

சிலருக்குக் காதுப் பிரச்னையால் தள்ளாட்டம், தலைசுற்றல் போன்றவை வரலாம். காதுக்குள்ளே மணி அடிப்பது போன்ற சத்தம் கேட்கும். இதற்கு `டைன்னிடஸ்’ (Tinnitus) என்று பெயர். செவித்திறன் குறைந்து, வாந்தி ஏற்பட்டு, மயக்கத்தை உண்டாக்குகிற நோய் உண்டு. இதற்கு `மெனியர்’ஸ் டிசீஸ்’ (Meniere’s Disease) என்று பெயர்.

நமது உள் காதில் மிகவும் நுண்ணிய முடியைப்போன்ற திசுக்கள் காணப்படுகின்றன. இவை ஓசையை மின்காந்த அலைகளாக மாற்றி, மூளைக்குச் செலுத்துகின்றன. இந்தத் திசுக்கள் பாதிக்கப்படும்போதோ, இந்த நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போதோ செவித்திறன் குறைகிறது.

குறிப்பிட்ட சில மருந்துகள் காதுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். காது கேளாமல் போதல், காதில் மணி ஒலிப்பதுபோன்ற உணர்வு, உடல் சமநிலையை இழத்தல் போன்ற பாதிப்புகள் வரும். இதை ஓட்டோடாக்ஸிசிட்டி என்போம். இதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தும் 200 வகையான மருந்துகள் இன்று மருத்துவச் சந்தையில் கொட்டிக்கிடக்கின்றன. ஓட்டோடாக்ஸிசிட்டியின் முதல் அறிகுறியே Tinnitus-தான். இந்த நிலை கவனிக்கப்படாமல் தொடரும்போது, காதில் உள்ள உணர்வு செல்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, காது கேளாமல் போகும். ஆஸ்பிரின், க்வானைன், குறிப்பிட்ட சில ஆன்டிபயாட்டிக் மருந்துகள், புற்றுநோய்க்காகத் தரப்படும் சில மருந்துகள், சிலவகை மயக்க மருந்துகள் போன்றவை ஓட்டோடாக்ஸிசிட்டி பாதிப்பை ஏற்படுத்தும்.

`ஆஸ்ட்டியோபோரோசிஸ்’ எனப்படும் எலும்புத் தேய்மானப் பிரச்னையால் நடுக்காது எலும்புகள் பாதிக்கப்பட்டு, கேட்டலில் குறைபாடு ஏற்படலாம். அறுவைசிகிச்சையின்மூலம் இதனைக் குணப்படுத்தலாம்.

காது கேளாமைக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, அதற்கேற்றாற்போலச் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. `ஹியரிங் எய்டு’ என்பது ஓர் ஆம்ப்ளிஃபயர். இது, வெளிச் சத்தங்களைப் பன்மடங்குப் பெரிதாக்கி, காதுக்குள் அனுப்பும். கேட்கும் திறனைச் சற்றுக் கூடுதலாக்க இது உதவும். அப்படியும் சரியாகக் காது கேட்கவில்லை என்றால், `காக்ளியர் இம்பிளான்ட்’ (Cochlear Implant) பொருத்திக்கொள்ள வேண்டும்.

* சளி, இருமல் போன்றவை தொடர்ந்து இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

* கூரான ஆயுதங்களைக் காதில் விடக் கூடாது. சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் சொட்டு மருந்தையோ காய்ச்சிய எண்ணெயையோ காதில் விடுவது சரியானதல்ல.

* அதிக நேரம் போனில் பேசுவது, அதிகச் சத்தத்துடன் ஹெட்போனை உபயோகிப்பது போன்றவை நிச்சயம் காதுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

* சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

* மது அருந்துவது, புகைபிடித்தல் இரண்டுமே காது நலனுக்குக் கேடானவை.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *