
குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் (ஜூலை 21) அறிவித்திருந்தார்.
உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். அவரின் திடீர் ராஜினாமா எதிர்கட்சிகளிடையே ஒருவித சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறது. திடீர் ராஜினாமா செய்த தன்கரின் பின்புலம் என்ன என்பதைப் பார்ப்போம்.
ஜெகதீப் தன்கர் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் 1951 ஆம் ஆண்டு கோகல் சந்த்-கேசரிதேவி தம்பதிக்கு மகனாக பிறந்தார்.
ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சட்ட படிப்பை முடித்த தன்கர் நீண்ட காலமாக வழக்கறிஞராக பணிப்புரிந்து வந்தார்.
1990ஆம் ஆண்டில்தான் உயர்நீதிமன்ற வழக்கறிஞராகி இருக்கிறார். பின்பு அரசியலில் களமிறங்கி இருக்கிறார். ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரஸ் அதைத் தொடர்ந்து பாஜகவிற்கு தாவிய தன்கர், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்திருக்கிறார்.
2008 சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக பிரச்சாரக் குழு உறுப்பினராக இருந்த தன்கர், 2016 -ல் பாஜகவின் சட்ட விவகாரத் துறைக்குத் தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து கடந்த 2019-ல் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அப்போது, மாநில அரசுக்கும் தன்கருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோதே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், மொத்தம் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை 346 வாக்குகள் வித்தியாசத்தில் தன்கர் தோற்கடித்தார்.
30 ஆண்டுகளில் ஒருவர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பெற்ற அதிகபட்ச வெற்றி வாக்குகள் அதுவாகவே இருந்தது. குடியரசு துணைத் தலைவரான பிறகு சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். அது சர்ச்சையிலும் முடிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.