
நடிகர் சூர்யா பிறந்தநாளான இன்று அவரது நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.
ரேடியோ ஜாக்கி, நடிகர், கதாசிரியர், கிரிக்கெட் வர்ணனையாளர் எனப் பன்முக திறமை கொண்ட கலைஞர் ஆர்.ஜே பாலாஜி.
தானே நாயகனாக நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வந்த ஆர்.ஜே பாலாஜி கருப்பு படத்தின் மூலம் முதன்முறையாக மற்றொரு நாயகனின் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்பறிவு மற்றும் விக்ரம் மோர் சண்டை பயிற்சி இயக்கத்தில் பணியாற்றியுள்ளனர். கலையரசன் படத்தொகுப்பில் பணியாற்றியுள்ளார்.
2கே கிட்ஸ்களின் சென்ஷேஷனான சாய் அபயங்கர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளது பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதில் சூர்யாவுடன் த்ரிஷா, யோகி பாபு, நட்டி நட்ராஜ், ‘லப்பர் பந்து’ சுவாஸ்விகா, ‘நெடுஞ்சாலை’ ஷிவதா, மலையாள நடிகர் இந்திரன்ஸ் என பலரும் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.
சூர்யாவை மட்டுமே முன்னிறுத்தி வெளியிடப்பட்ட டீசரில், ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்களை போல அவர் வழக்கறிஞராக நடிப்பது வெளிப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை ஆக்க்ஷன் கதையில். மேலும் சூர்யாவின் கஜினி பட ரெஃபரன்ஸும் இதில் இடம் பெற்றுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் இது ஒரு ஃபேன் பாய் சம்பவம் என கொண்டாடி வருகிறார்கள்.