• July 23, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் திருப்பூர் மாநகர் பகுதிகளில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் 22,23-ஆம் தேதிகளில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதேபோல், கட்சிரீதியாக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் வடக்கு மாவட்டச் செயலாளரும், மேயருமான தினேஷ்குமார், தெற்கு மாவட்டச் செயலாளரான இல.பத்மநாபன் ஆகியோரும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அவரை வரவேற்று பேனர்களை வைத்திருந்தனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால், திருப்பூர் மாவட்டத்துக்கான நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, வேறொரு நாளில் நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுஒருபுறம் இருக்க முதல்வரை வரவேற்று திமுக-வின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம் பிரசாத் வைத்திருந்த பேனர்கள் இரவோடு இரவாக கிழிக்கப்பட்டுள்ளது திருப்பூர் மாவட்ட திமுக-வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேனர் கிழிப்பு

பேனர் கிழிப்பு

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக அண்மையில் இல.பத்மநாபன் நியமிக்கப்பட்டார். காங்கேயம் தொகுதியைச் சேர்ந்த இல.பத்மநாபன் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு, நகரம், ஒன்றியம் என கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், இல.பத்மநாபன் வரும் தேர்தலில் உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதாக அவரது ஆதரவாளர்கள் பேசிவருவது அந்தத் தொகுதிக்குள் ஆதரவு, எதிர்ப்பு என நிர்வாகிகளுக்குள் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம் பிரசாத் வரும் தேர்தலில் உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட காய்களை நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை வரவேற்று குடிமங்கலம் பகுதியில் ஷியாம் பிரசாத் வைத்திருந்த 15-க்கும் மேற்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது தற்போது, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இல.பத்மநாபன்

கோஷ்டி மோதல்?

இதுகுறித்து தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பேசுகையில், “இல.பத்மநாபன் மாவட்டச் செயலாளராக நியமிகப்பட்டதற்குப் பிறகு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் தலை தூக்கியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் தனி டீமாகவும், எதிர்ப்பாளர்கள் தனி டீமாகவும் இருக்கின்றனர். இந்நிலையில் யார் வேட்பாளர் என்ற போட்டிய திமுகவுக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

மண்ணின் மைந்தருக்கு மூன்று தேர்தல்களாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த முறையாவது உடுமலைப்பேட்டை தொகுதியைச் சேர்ந்தவருக்கு சட்டப் பேரவைத் தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது, இந்த பின்னணியில்தான் உடுமலைப்பேட்டை தொகுதிக்கு காய் நகர்த்தி வரும் ஷியாம் பிரசாத்தின் பேனர்கள், மாவட்டத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரின் தூண்டுதலால் கிழிக்கப்பட்டுள்ளது” என்கின்றனர்.

ஷியாம் பிரசாத்

தலைமைக்கு கொண்டு செல்வேன்

இதுகுறித்து ஷியாம் பிரசாத் கூறுகையில், “முதல்வர் ஸ்டாலினை வரவேற்று 35-க்கும் மேற்பட்ட இடங்களில் பேனர்கள் வைத்திருந்தேன். அரசியலில் எனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் இரவோடு இரவாக 15 இடங்களில் நான் வைத்திருந்த பேனர்களை கிழித்துள்ளனர். நான் வைத்த பேனர்களுக்கு அருகிலேயே மற்ற ஒன்றியச் செயலாளர்கள் முதல்வர் வரவேற்று பேனர்களை வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் பேனர் மட்டும் கிழிக்கப்படவில்லை.

திட்டமிட்டு எனது பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. இதை கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளேன்” என்றார்.

இதுகுறித்து தெற்கு மாவட்ட திமுக செயலாளரான இல.பத்மநாபனிடம் பேசினோம், “முதல்வரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை வந்துவிட்டேன். முதல்வரை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டது குறித்து எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன். எங்களுக்குள் எந்த கோஷ்டி மோதலும் இல்லை” என்றார். முதல்வரை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது திருப்பூர் மாவட்ட திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *