• July 23, 2025
  • NewsEditor
  • 0

சாத்தான்குளத்தில் காவல்துறை சித்திரவதையால் தந்தை-மகன் மரணமடைந்த வழக்கில் அப்ரூவராக மாற உள்ளதாக சிறையில உள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு போலீஸாரின் தாக்குதலினால் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 22, 23 தேதிகளில் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர்.

நாட்டையே அதிரவைத்த இந்த கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஐ பால்துரை உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவைத் தொடர்ந்து, சி.பி.ஐ-யால் விசாரணை நடத்தப்பட்டு வரும் இவ்வழக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவர்களில், எஸ்.எஸ்.ஐ பால்துரை உடல்நலக்குறைவால் கடந்த 2020 ஆகஸ்டில் உயிரிழந்தார். மீதி 9 பேர் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர்.

இவர்கள் பலமுறை ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்தும் உயர் நீதிமன்ற மனுக்களை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், ‘தான் அப்ரூவராக மாற விரும்புவதாக’ முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், “நான் அப்ரூவராக மாறி அரசு சாட்சியாக அனைத்து காவலரும் செய்த குற்றங்களை சொல்ல விரும்புகிறேன். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தை மகன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க விரும்புகிறேன்” எனக் கூறி உள்ளார்

ஜெயராஜ் – பென்னிக்ஸ்

இதுகுறித்து பதில் அளிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிட்ட மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜூலை 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *