
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் யார் மெஜாரிட்டியை கைப்பற்றுவது என்பதில் கூட்டணிகளுக்குள் மட்டுமல்லாது… கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்குள்ளேயே நீயா நானா யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிடும் புதுச்சேரியின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், தங்களது தொகுதிகளை தாங்களே தேர்வு செய்து, மக்களுக்கான நல உதவிகளை தாராளமாக வாரி வழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமா… அப்படியே கிடைத்தாலும் இந்தத் தொகுதி கிடைக்குமா என்றெல்லாம் தெரியாத நிலையிலும் சிலர் பெருத்த நம்பிக்கையுடன் தொகுதிகளுக்குள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல் இரண்டு முக்கிய கூட்டணியிலும் உள்ள கட்சிகளும் தங்களுக்கு இத்தனை தொகுதிகள் என கூட்டணிக்குள்ளேயே கொடிபிடிக்கத் தொடங்கிவிட்டன.