
`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை இன்னும் சில தினங்களில் செயல்பட இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணி தொடங்கப்பட்டபோது, அதை வைத்து பணம் சம்பாதிக்க மோசடிக் கும்பல் திட்டமிட்டது.
அதன்படி, `ஜிப்மர் மருத்துவமனைக்கு செவிலியர்கள், உதவியாளர்கள் மற்றும் செக்யூரிட்டி வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். மத்திய அரசு நிறுவனம் என்பதால் கை நிறைய சம்பாதிக்கலாம். மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம். முதலில் வருபவர்களுக்குத்தான் முன்னுரிமை’ என்று அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு ஆசை காட்டிய அந்தக் கும்பல், அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் சுருட்டியது.
போலி பணி ஆணை, ஐ.டி.கார்டு
அப்படி பணம் கொடுத்தவர்களுக்கு போலி பணி ஆணையுடன் ஜிப்மர் மருத்துவமனையின் ஐ.டி.கார்டையும் கொடுத்த அந்தக் கும்பல், வேலையில் சேரும் வரை இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் கூறியிருக்கிறது.
மருத்துவமனை செயல்படும் நிலைக்கு வந்தபிறகும் நிர்வாகத்தில் இருந்து எந்த அழைப்பும் வராததால், பாதிக்கப்பட்டவர்கள் பணம் கொடுத்தவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு சரியான பதில் சொல்லாத அந்தக் கும்பல் அவர்களை மிரட்டியிருக்கிறது.
அதையடுத்து மோசடிக் கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்த தட்சிணாமூர்த்தி, வாசுதேவன், தரணிஷ்குமார், மங்கையர்கரசி, சூசைமேரி உள்ளிட்டவர்கள் நெடுங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
அந்த விவகாரம் வெளியில் கசிந்தவுடன் மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள், தாங்களும் ஏமாற்றப்பட்டதாக புகாரளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார் கோட்டுச்சேரி நீலமேகம், அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் விக்கி, ஜானகிராமன், திருநள்ளார் பகுதியைச் சேர்ந்த காயத்ரி உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.

`கல்வி உதவித் தொகை பெயரில் வெற்றுக்கவர்..’
அத்துடன் அவர்களிடம் இருந்து ஜிப்மர் மருத்துவமனையின் போலி ஐ.டி கார்டுகள், பணி ஆணைகள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்தக் கும்பல் புதுச்சேரியில் மட்டுமல்லாமல் நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், “அரசு வேலை ஆசையில் இருக்கும் விளிம்பு நிலை மக்களை இந்த மோசடிக் கும்பல் குறி வைத்திருக்கிறது. அவர்களுக்கு சந்தேகம் வந்து பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர்களை மிரட்டியிருக்கிறார்கள்.

அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகரான விக்கி என்பவர், தன்னை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் என்று காட்டிக் கொண்டு வலம் வந்தவர். கொள்ளையடித்த பணத்தில்தான் கடந்த ஆண்டு அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாளுக்கு புதுச்சேரி முழுக்க பேனர் வைத்தான்.
அது தவிர திடீர் சமூக சேவகராக மாறி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை தருகிறேன் என்று கூறி, அவர்களுக்கு வெற்று கவர்களை கொடுத்து ஏமாற்றியவன்” என்றனர்.