
நடிகரும், எம்.பி-யுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மகளிர் அணி நிர்வாகியாக இருப்பவர் சினேகா மோகன்தாஸ் (32).
ஃபுட் பேங்க் இந்தியா (உணவு வங்கி) என்ற அறக்கட்டளையின் நிறுவனராகவும் இருக்கும் இவர் நேற்று வாடகை ஆட்டோவில் வெளியே புறப்பட்டுள்ளார். ஆட்டோ டிரைவர் பிரசாந்த் ஆட்டோவை வேகமாக ஓட்டியதாகக் கூறப்படுகிறது. இது பற்றி ஆட்டோ டிரைவரிடம் சினேகா மோகன்தாஸ் கேட்டுள்ளார். அதற்கு அவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆட்டோ டிரைவருக்கும் சினேகாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையில், சினேகா மோகன்தாஸ் ஆட்டோவின் சாவியை எடுக்க முயன்றதாகவும், அதனால் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பிரசாந்த் ஆட்டோவை சாலையின் ஓரமாக நிறுத்தி, ஆட்டோவிலிருந்து சினேகா மோகன்தாஸை ஆட்டோவிலிருந்து இறங்கும்படி கூறியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த சினேகா மோகன்தாஸ் ஆட்டோ டிரைவரை கடுமையாகத் திட்டி, செருப்பால் தாக்கியிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டே மாறி மாறி தாக்கிக்கொண்டனர். வாகன ஓட்டிகள் பலரும் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
இதற்கிடையே சென்னை மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்திருக்கின்றனர். அதன்பேரில் காவல்துறை ஆபாசமாக பேசுதல், தாக்குதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சினேகா மீதும், ஆட்டோ டிரைவர் பிராசாந்த் மீதும் வழக்குப் பதிவு செய்தது. பிரசாந்தை மட்டும் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில் சினேகா மோகன் தாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “சைதாப்பேட்டையிலிருந்து பிரெசிடென்ஸி காலேஜ் போவதற்காக ஆட்டோவை எடுத்தோம். ஆட்டோ டிரைவர் சிறிது தூரம் சென்றதும் மேம்பை ஆஃப் செய்துவிட்டார். நேராக நாங்கள் சொன்னப் பகுதிக்குச் செல்லாமல் பல இடங்களில் சுற்றிக்கொண்டே இருந்தார். ஆட்டோவையும் சரியாக ஓட்டவில்லை. அப்போதுதான் ஏன் இப்படி ஆட்டோ ஓட்டுகிறீர்கள் ஏனக் கேட்டேன்.
What actually happened with auto driver issue. #SnehaMohanDas #snehamohandoss #autodriver pic.twitter.com/QcfjprIou9
— Sneha Mohandoss (@snehamohandoss) July 21, 2025
உடனே அவர், நீ கொடுக்கும் காசுக்கு இப்படித்தான் ஓட்டமுடியும் என்றார். என்ன மரியாதை இல்லாம பேசுறீங்க எனக் கேட்டதும் என்னை அடித்தார். அதன்பிறகுதான் நான் தாக்கத் தொடங்கினேன். மீடியாவில் வெளியான எந்த வீடியோவிலேயும் அவர் என்னை அடிக்கும் காட்சி இல்லை. இங்கு ஆண் – பெண் என்றெல்லாம் இல்லை. அங்கு ஒரு பெண் இருந்து இதுபோல செயல்பட்டிருந்தால் அவரிடமும் நான் இப்படித்தான் நடந்திருப்பேன். இது பணக்காரர் – ஏழை என்பதும் இல்லை. தனி மனித ஒழுக்கம் சம்பந்தப்பட்டது.” என்றார்.