
லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தலைச்சுற்றல் ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் கண்டறிவதற்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப்பதிவில், “ மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சசர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

உடல்நலத்தைப் பற்றி பொருட்படுத்தாமல், ஓய்வில்லாமல் உழைக்கும் அவர் தனது உடல்நலத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டுமென விரும்புகிறேன். மருத்துவமனையில் இருக்கும் அவர் பூரண நலம் பெற விழைகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.