
சென்னை: “வன்னியர்களின் சமூகநீதியை மறுத்து உங்கள் தலைமையிலான ஆட்சிக்கு நீங்களே முடிவுரை எழுதி விடாதீர்கள். வன்னியர்க்கு உடனே உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1208 நாள்களாகியும், அதை செயல்படுத்தியத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், வன்னியர்களுக்கு உடனடியாக உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற மாபெரும் மக்கள்திரள் போராட்டம் வரலாறு காணாத வெற்றியை பெற்றிருக்கிறது. இதை சாத்தியமாக்கிய பாட்டாளி சொந்தங்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.