
கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சு நாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.
தூய்மைப் பணியாளரின் புகார்
கடந்த ஜூன் மாதம், தர்மஸ்தலா மஞ்சு நாதர் கோயில் முன்னாள் தூய்மைப் பணியாளர் பரபரப்பு புகார் மனு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.
அதில், “1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்யச் சொல்லி என்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினார்கள்.
இதை நான் செய்யவில்லை என்றால் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்.
பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருக்கிறேன். பெண்களின் உடலில் பாலியல் வன்முறைக்கான காயங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் காணப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.
கடந்த 11-ம் தேதி, இவர் பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது, சில எலும்புகளையும் கொண்டு வந்திருந்தார்.
தாய் புகார்
இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி, 2003-ம் ஆண்டு, தன் மகள் தர்மஸ்தலாவில் காணாமல் போனதாக பெண் ஒருவர் தட்சின கன்னடாவின் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க, சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கர்நாடகா முழுவதும் பரவலான கோரிக்கை எழுந்தது.

சிறப்பு புலனாய்வுக் குழு
இதனையடுத்து, நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் டி.ஜி.பி ப்ரோனாப் மொஹந்தி, டி.ஐ.ஜி எம்என் அனுசேத், ஐ.பி.எஸ் அதிகாரிகள் எஸ்கே சௌமிலதா, ஜிதேந்திர குமார் தயாமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வழக்கு குறித்த எஃப்.ஐ.ஆரையும், கர்நாடகா முழுவதும் உள்ள காவல் நிலையங்களில், இதே மாதிரி பதிவாகி உள்ள வழக்குகளையும் இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கும்.
இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்று மஞ்சு நாதர் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.