
குஜராத் மாநிலம் சூரத்தில் கொசாம்பா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்புன்னிஷா என்ற 63 வயது மூதாட்டி. இவருக்குக் கடந்த 20 ஆண்டுகளாகக் காதுகேட்பதில் சிக்கல் இருந்துள்ளது.
கடைசி 10 ஆண்டுகள் மிக மோசமான நிலை இருந்துள்ளது. எந்தவொரு காதுகேட்கும் கருவியும் கூட அவருக்கு உதவ முடியவில்லை.
ஜெய்புன்னிஷாவின் மகள்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். காதுகேளாமையால் எந்தப் பொது நிகழ்ச்சிகளுக்கும், உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அக்கம்பக்கத்தினருடன் தொடர்பில்லாமல் தனிமையில் வாடியுள்ளார்.
ஜெய்புன்னிஷாவுக்கு ஜூலையில் கோக்லியர் உள்வைப்பு அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இது காதுகேட்பதற்கான நரம்புகளைத் தூண்டும் ஒரு வித சிகிச்சை.
இதற்காக துபாயில் ரேடியாலஜிஸ்ட்டாக இருக்கும் அவரது மகள் இந்தியா வந்துள்ளார். அமெரிக்காவில் பல் மருத்துவராக இருக்கும் மகள் சிகிச்சை குறித்து அறிய ஆவலாகக் காத்திருந்திருக்கிறார்.
அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கு முன்னரே திடீரென ஜெய்புன்னிஷாவுக்குச் சுத்தியிருந்த சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.
உடனடியாக தனது கணவரிடம் சென்று கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினரிடம் பேசி உறுதி செய்துள்ளனர்.
இந்தத் திடீர் மாற்றம் முழு வாய் மறுசீரமைப்பு, டெம்போரோமாண்டிபுலர் மூட்டு மறுவாழ்வு (temporomandibular joint rehabilitation) மற்றும் நரம்பு சுருக்கம் (nerve decompression) ஆகிய பல் தொடர்பான சிகிச்சைகளை அடுத்தடுத்து மேற்கொண்டதனால் நடந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
“பல் சிகிச்சையால் அவரது கேட்கும் திறன் மேம்பட்டுள்ளது. நரம்பு சுருக்கம் சிகிச்சையில் காதுடன் தொடர்புடைய நரம்பில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்” என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கேட்கும் திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால் அவரது கேக்லியல் அறுவை சிகிச்சையை நிறுத்தி வைத்துள்ளனர்.