
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள்தான் இருக்கின்றன. ஆளும் தி.மு.க அரசு ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைக்கத் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அரியணையைப் பிடிக்க மும்முரம் காட்டி வருகிறது. நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் அதிகாரத்தைக் கைப்பற்றக் கோதாவில் குதித்திருக்கின்றன. இதற்காக சீட் பகிர்வு, தலைவர்களின் சுற்றுப்பயணம், ஓட்டுக்கான வியூகங்கள் வகுப்பதில் அரசியல் கட்சிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் ஒவ்வொரு கட்சியும், இன்னொரு கட்சியின் கூட்டணியைக் கலைக்கும் வேலைகளைத் தொடங்கியிருப்பதால் தமிழகத்தில் இப்போதே தேர்தல் புயல் மிகத் தீவிரமாக வீசத்தொடங்கியிருக்கிறது. எனவே தமிழக அரசியல்களத்தில் என்னதான் நடக்கிறது.. களமிறங்கினோம்!
சமீபத்தில் இந்து முன்னணி கட்சி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. பா.ஜ.க ஆதரவுடன் நடந்த இந்த மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சனம் செய்து வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் அ.தி.மு.க சார்பில் ஆர்.பி உதயகுமார், கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் பங்கேற்றிருந்தனர். தி.மு.க இதை வைத்து அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக்குள் வெடியைக் கொளுத்திப்போட்டது. குறிப்பாக “மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவைப் பற்றி தவறாகப் பேசிய வீடியோவை அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அ.தி.மு.க-வின் பெயரில் ‘அண்ணா’ என்று இருந்தும், அண்ணாவையே அவமானப்படுத்துவதை அவர்கள் ரசிப்பது சரியா?. உங்களின் உடம்பில் ஓடுவது அ.தி.மு.க ரத்தமா? பா.ஜ.க பாசமா?” எனக் கொதித்தனர். இப்படி இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்ததால் ஆர்.பி உதயகுமார் போன்றவர்கள் பா.ஜ.க-வுக்கு கண்டனம் தெரிவிக்கும் சூழல் ஏற்பட்டது.
இதேபோல் திருச்சி சிவாவின் காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சைக் கையில் எடுத்து தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன எதிர்க்கட்சிகள். சமீபத்தில் பேசிய தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, “எனக்கு 23, 24 வயது இருந்தபோது நிறைய நிகழ்வுகளைக் கருணாநிதி கூறுவார். காமராஜர் தங்கும் இடத்தில் குளிர்சாதன வசதி இல்லாவிட்டால் உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதால் அவர் தங்கும் அனைத்துப் பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதியைச் செய்து கொடுத்ததாகக் கருணாநிதி என்னிடம் கூறினார். அப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி காமராஜர் கண்டனக் கூட்டம் நடத்துவதாகவும் அவர் நம்மை எதிர்த்துப் பேசுவதாகவும் கருணாநிதி கூறினார்” என்றார்.

இதற்குக் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, “முதலமைச்சராக இருந்தபோது அரசினர் விடுதியில் தங்கியிருந்த காமராஜர், மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர். அவர் ஏ.சி இல்லாமல் தூங்க மாட்டார் எனத் திருச்சி சிவா கூறியது உண்மைக்குப் புறம்பானது. காமராஜருக்கு எதிராகக் கடந்த காலத்தில் காழ்ப்புணர்ச்சியில் பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. காமராஜர் வாழ்ந்த வீட்டுக்குக் காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. ஆனால், அது அவரது சொந்த மாளிகை என தி.மு.க பரப்பிய கட்டுக்கதைகளால் தேர்தல் நேரத்தில் அவர் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு” என்றார். இப்படி பலரும் எதிர்ப்பு தெரிவிக்க தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்குள் லேசான சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவர் தமிழிசை, “காமராஜர் எனும் மாபெரும் தலைவரை இந்த அளவுக்குக் கொச்சைப்படுத்தி உள்ளனர். திருச்சி சிவா பேசுவதை விட்டுவிட வேண்டும் எனக் கேட்கிறாரே தவிரத் தப்பு எனக் கூறவில்லை. முதலமைச்சரும் ஒரு தலைவரைக் களங்கப்படுத்தி விட்டனர் எனக் கூறவில்லை. காமராஜர் குறித்த மதிப்பும் அக்கறையும் தி.மு.க-வினருக்கு இல்லை. காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுக்காக இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதைவிடக் கேவலம் எதுவும் கிடையாது. ஒரு மாபெரும் தலைவரைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இணையதளவாசிகள் அவர் படுத்திருந்தபோது ஏசி இருந்த படம் எனப் பதிவிட்டு வருகின்றனர். இதெல்லாம் வேதனை அளிக்கிறது” என்றார். இப்படி பலரும் திருச்சி சிவாவின் பேச்சை வைத்து கூட்டணியைக் கலைக்க முயன்றனர்.

மறுபக்கம் எடப்பாடி சமீபத்தில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்துகொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா.. இல்லையா.. என்ற முகவரி இல்லாமல் இருக்கிறது. ஸ்டாலினுக்கு அடிமையாக இருக்கிறார்கள். சிபிஐஎம் தலைவர் சண்முகம், ‘தி.மு.க ஆட்சியில் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முடியவில்லை. இப்படியே போனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது’ என்கிறார். கூட்டணி கட்சியினரே இப்போது தி.மு.க-வை நம்பத் தயாராக இல்லை. ஆனால் தங்கள் கூட்டணி வலுவாக உள்ளதாகச் சொல்கிறார் ஸ்டாலின்” என்றார்.
பிறகு சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ” தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே மு.க.ஸ்டாலின் வேட்டு வைக்கிறார். தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி விழுப்புரத்தில் மாநாடு நடத்த அனுமதி இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி திருச்சியில் மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் நட அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வளவு அசிக்கப்பட்டும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க கூட்டணியில் இருக்க வேண்டுமா.. சிந்தித்துப் பாருங்கள்… அ.தி.மு.க கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்” என்றார்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “எடப்பாடி கடந்த வாரம் கம்யூனிஸ்ட்களையே காணவில்லை என்று சொன்னார். இந்த வாரம் கூட்டணிக்கு அழைக்கிறார். இப்போது கம்யூனிஸ்ட்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல. வஞ்சக வலை என்பதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம். ஆர்.எஸ்.எஸ் என்ற புதை குழிக்குள் விழுந்துவிட்டு வெளியேற முடியாமல் அ.தி.மு.கதான் சிக்கியுள்ளது” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், “இதுதான் 2025-ம் ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை. 2021-ம் ஆண்டு தமிழகத்தை மீட்போம் என இந்திய கம்யூனிஸ்ட் வைத்த முழக்கத்தையே இப்போது எடப்பாடி பழனிசாமி இரவல் பெற்றுச் சுற்றுப் பயணம் செய்கிறார். கோவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு முகவரியே இல்லை, காணாமல் போய்விட்டனர் என்று பேசியிருந்தார். ஆனால், ஒரு வார இடைவெளியில் கம்யூனிஸ்ட்டுகளைக் கூட்டணிக்கு அழைக்கிறார். எங்களை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லை. அது ரத்தக் கறை படிந்த கம்பளம்” என்றார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன், “நிறைவேறாது எனத் தெரிந்தும் திரும்பத் திரும்ப அழைப்பது வேடிக்கையாக உள்ளது. இதன்மூலம் தி.மு.க கூட்டணிக்குள் குழப்பம் உருவாகும், விரிசலை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். ஏன் 4 சீட் 6 சீட் வாங்குகிறீர்கள் என எங்கள் மீது இப்போது திடீர் கரிசனம் வந்துள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் வி.சி.க-வும் ஒன்று” என்றார். இப்படியாக ஒவ்வொரு கட்சியும், இன்னொரு கட்சியின் கூட்டணியைக் கலைக்கும் வேலைகளைத் தொடங்கியிருப்பதால் தமிழக அரசியல்களம் அனல் தகித்துக்கொண்டிருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல அரசியல் கட்சிகளின் ஆடுபுலி ஆட்டம் மேலும் தீவிரமடையும் என்பதால் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். இதையடுத்து தி.மு.க-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், இணையதள நிர்வாகிகளும் விமர்சனத்தை முன் வைக்கிறார்கள். மறுபக்கம் தி.மு.க கூட்டணிக்குள் இருக்கும் பிரச்னைகளை எடப்பாடி கையில் எடுத்துப் பேசுகிறார். வி.சி.க-வுக்கு கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றெல்லாம் பேசுகிறார்கள். சாம்சங் விவகாரத்தில் தி.மு.க, கம்யூனிஸ்ட் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்தன. ஆனாலும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். இப்படி அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியிலும் முரண் இருக்கும். ஆனாலும் மற்றொரு கூட்டணியில் இருக்கும் பிரச்னையைப் பேசுவது அந்த கட்சியின் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் தந்திரம்.
ஆனால் கூட்டணி உடையுமா என்றால் இப்போதைக்குத் தெரியாது. 2006 காலகட்டத்தில் அ.தி.மு.க கூட்டணியில் வி.சி.க இருக்கிறது. ஆனால் முதல்வராக இருந்த ஜெயலலிதாவைச் சந்திக்க திருமாவளவனால் முடியவில்லை. அப்போது திருமாவை அழைத்த கருணாநிதி, ‘இன்னுமா கதவு திறக்கும் எனக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். தி.மு.க கூட்டணிக்கு வாருங்கள்” என அழைத்தார். அப்போது எவ்வளவு பெரிய எதிர்க்கட்சித் தலைவர் நம்மைக் கூட்டணிக்கு அழைக்கிறார் எனப் புளகாங்கிதம் அடைந்தவர்கள்தான் வி.சி.க-வினர். அதேபோல் இப்போது எடப்பாடி அழைக்கிறார்.

டிசம்பர் வரையில் இப்படித்தான் இருக்கும். யார் யாருடன் இருப்பார்கள் என உறுதியாகச் சொல்ல முடியாது. காமராஜர் விவகாரத்தை விட்டுவிடலாம் எனச் சொன்ன பிறகும் சேலத்தில் திருச்சி சிவாவின் கொடும்பாவியைக் காங்கிரஸ் கட்சியினர் எரித்திருக்கிறார்கள். காமராஜர் குறித்து கருணாநிதி பேசிய வீடியோவை எடுத்து தி.மு.க-வினர் இணையத்தளத்தில் பரப்புகிறார்கள். ஆகக் கருணாநிதியின் கொடும்பாவியைக் காங்கிரஸ் கட்சியினர் கொளுத்துவார்களா?. எனவே இரண்டு பக்கத்திலும் கூட்டணியைக் கலைப்பதற்குப் பலகட்ட முயற்சிகளை எடுப்பார்கள். இதெல்லாம் பலன் அளிக்குமா, அளிக்காதா என்பது இப்போதைக்குத் தெரியாது” என்றார்.