
அனைத்து சர்வதேச அணிகளின் முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் WCL போட்டி இங்கிலாந்தில் கடந்த 18-ம் தேதி தொடங்கியது.
இந்தத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என 6 அணிகள் விளையாடுகின்றன. இதில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் இன்று நடைபெறவிருந்தது.
இந்தப் போட்டியில் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், யூசுஃப் பதான் ஆகியோர் இந்தப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, WCL போட்டி நிர்வாகம் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி, பாகிஸ்தான் உடனான போட்டியில் அவசியம் விளையாட வேண்டுமா? எனக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதன் பிறகே, இந்திய வீரர்கள் பலரும் இந்தப் போட்டியிலிருந்து விலகினர்.
போட்டியை ரத்து செய்தது குறித்து WCL போட்டி நிர்வாகம், “எங்களின் ஒரே நோக்கம், ரசிகர்களுக்கு நல்ல, மகிழ்ச்சியான தருணங்களை வழங்குவதாகவே இருந்தது. பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்த ஆண்டு இந்தியாவுக்கு வருவதாக வந்த செய்தியை அறிந்திருந்தோம்.
சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கைப்பந்து போட்டியையும், மற்ற விளையாட்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான சில போட்டிகளையும் பார்த்து, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்கும் பொருட்டு WCL-ல் இந்தியா – பாகிஸ்தான் போட்டியைத் தொடர்ந்து நடத்தலாம் என்று நினைத்தோம்.

ஆனால், இந்தச் செயல்பாட்டில், பலரின் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறோம். அதற்கு மேலாக, நாங்கள் எதிர்பாராத வகையில், நாட்டிற்கு பெருமை தேடித்தந்த எங்கள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திவிட்டோம்.
எனவே, இந்தியா – பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மீண்டும் மனமார்ந்த மன்னிப்பு கோருகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.