
பூண்டு உற்பத்தியில் இந்திய அளவில் சிறந்து விளங்கும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டியும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஊட்டி மட்டுமின்றி, குன்னூர், கோத்தகிரி, குந்தா சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பூண்டு பயிரிடுகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் பூண்டினை விதை தேவைகளுக்காக வடமாநிலங்களில் அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் மொத்த ஏலத்தில் விவசாயிகள் தங்கள் பூண்டினை விற்பனை செய்து வருகின்றனர்.
ஊட்டி பூண்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.600, ரூ.700 வரை விற்பனையாகி வந்தது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் வரத்து அதிகரிப்பு காரணமாக படிப்படியாக விலை சரிந்து ஒரு கிலோ பூண்டு ரூ.50, ரூ.60 – க்கு விற்பனையாகி வந்தது.
அறுவடை செலவுகளுக்கே போதவில்லை என கடந்த சில மாதங்களாக விவசாயிகள் புலம்பி வந்த நிலையில், படிப்படியாக விலை உயர்ந்து கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ பூண்டு 200 ரூபாய்க்கு மேல் ஏலம் போனது.
இன்றைய மொத்த ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு கிலோ ஊட்டி பூண்டு 300 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு ஊட்டி பூண்டு விலை உச்சத்தை நோக்கி நகர்வதால் பூண்டு விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.