
யுனெஸ்கோ உலக பாரம்பர்யச் சின்னங்களின் பட்டியலுக்கான 2024 – 25-ம் ஆண்டு பரிந்துரையாக ‘Maratha Military Landscapes’ என்ற பெயரில் 12 கோட்டைககளை இந்திய அரசின் கலாசார அமைச்சகம் பரிந்துரைத்து அனுப்பியது.
அதில் சல்ஹர் கோட்டை, ஷிவ்நேரி கோட்டை, லோகட், காந்தேரி கோட்டை, ராய்கட், ராஜ் கட், பிரதாப்கட், ஸ்வர்ணதுர்க், பன்ஹலா கோட்டை, விஜய் துர்க், சிந்து துர்க், செஞ்சிக் கோட்டை ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இதில் செஞ்சிக் கோட்டையைத் தவிர்த்த பிற வரலாற்றுச் சின்னங்கள் எல்லாம் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவை.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோட்டைகளில் ஒன்றான செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ உலக பாரம்பர்யச் சின்னத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்த முதல்வர் ஸ்டாலின், “‘கிழக்கின் ட்ராய்’ என அறியப்படும் செஞ்சிக் கோட்டை, இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சோழர் கோயில்கள், மாமல்லபுரம், நீலகிரி மலை ரயில், மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவற்றின் வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து கம்பீரமான செஞ்சி மலைக்கோட்டை இப்பட்டியலில் தற்போது இணைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கும் அதன் நிலைத்த பண்பாட்டு மரபுக்கும் பெருமிதத் தருணமாக இது அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், “இந்த அங்கீகாரத்தால் ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த ‘மராட்டிய ராணுவ நிலப்பரப்புகளில்’ 12 கம்பீரமான கோட்டைகள் அடங்கியுள்ளன. அவற்றில் 11 மகாராஷ்டிராவில் உள்ளன. 1 தமிழ்நாட்டில் (செஞ்சி) உள்ளது.

புகழ்பெற்ற மராட்டியப் பேரரசைப் பற்றி நாம் பேசும்போது, அதை நல்லாட்சி, ராணுவ வலிமை, கலாச்சார பெருமை, சமூக நலனில் முக்கியத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துகிறோம். சிறந்த ஆட்சியாளர்கள் எந்த அநீதிக்கும் தலைவணங்க மறுப்பதன் மூலம் நம்மை ஊக்குவிக்கிறார்கள். இந்த கோட்டைகளைப் பார்வையிடவும், மராட்டியப் பேரரசின் வளமான வரலாற்றைப் பற்றி அறியவும் அனைவரையும் நான் இந்தக் கோட்டைகளுக்கு அழைக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இந்த அங்கீகாரம் மராத்திய மன்னரான சிவாஜியுடன் தொடர்புபடுத்தப்பட்டு வழங்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செஞ்சிக்கோட்டையை மாமன்னர் சிவாஜியோ, பிற மன்னர்களோ, அரசர்களோ, கட்டி காப்பாற்றினார்கள் என்று எந்தக் கல்வெட்டுச் சான்றும், பாடல்கள் சான்றும் இல்லையே!
மாமன்னர் சிவாஜியின் மகனென அறியப்பட்ட ராஜாராம், தந்தைக்கு அடுத்து செஞ்சிக் கோட்டையில் நுழைந்த கொஞ்ச நாள்களிலேயே மொகலாய பேரரசன் அவுரங்கசீப்பிடம் மோத முடியாமல் சரண் அடைந்துள்ளார்.

மொகாலய ஆளுநர் சொரூப்சிங் என்பார், கொஞ்ச காலம் செஞ்சியை நிர்வாகம் செய்துள்ளார், அவருடைய மகன்தான் தேஜ்சிங் என்கிற தேசாங்சிங்.
இந்த ஆளுநர் மகனான தேசாங் சிங்கைத்தான் மக்கள் அறியாமையில், தேசிங்குராஜா என்றழைத்து, அவரும் வரலாற்றில் தமிழ் மாமன்னன் போல தோற்றம் பெற்று விட்டார்.
22 வயதிலேயே வயதுக்கும் தகுதிக்கும் மீறி ஆட்சி, அதிகாரம் என்று தனக்கான இடத்தை தகப்பன் மூலம் பிடித்து விட்டாலும், போதிய பக்குவம் இல்லாததால் 22 வயதிலேயே ஆற்காடு நவாப் படையிடம் மோதி ஒரு மணி நேரத்திலேயே சிறை பிடிக்கப்பட்டு சின்னாபின்னமாகிப் போனான். இவையெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை வரலாறு.
இந்த வரலாற்றின் எந்தப் பக்கத்திலும், தமிழனான ‘காடவ’ மன்னர்கள் கட்டியதே செஞ்சிக்கோட்டை என்ற தரவு தவிர்த்து வேறொன்றை நான் பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, கி.பி. 1076 – 1279 வரை நடுநாட்டுப் பகுதிகளை ஆட்சி செய்த சிற்றரசர்களான காடவர் வம்சத்தினரே இந்தக் கோட்டையைக் கட்டியதாக அவர் குறிப்பிடுகிறார்.
இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், தமிழ் மன்னராகிய கோனேரிக்கோன் என்பவரால், செஞ்சி கோட்டை கட்டப்பட்டது. உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக அங்கீகரிக்கும் பன்னாட்டு அமைப்பான யுனஸ்கோ நிறுவனம், மராத்திய மன்னர் சிவாஜியின், 12 கோட்டைகளில் ஒன்றாக சேர்த்து, செஞ்சியை அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழர்களுக்கு சொந்தமான செஞ்சி கோட்டையை, மராத்தி மகாராஷ்டிராயர்களின் கோட்டையாக்க மாநில அரசும் முயல்வதும், அதற்கு மத்திய அரசு துணை நிற்பதும் கண்டனத்துக்குரியது. இந்த வரலாற்று திரிபை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசு, சிறிதும் உணர்வற்று வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களுக்கு செய்கிற பச்சைத்துரோகம். செஞ்சி கோட்டை தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்ட நமது பாரம்பரிய சொத்தாகும்.
யாராலும் எளிதில் கைப்பற்ற முடியாத அதன் அமைவிட சிறப்பால், மூவேந்தர்களின் ஆட்சிக் காலத்திலேயே, செஞ்சி கோட்டை புகழ் பெற்று விளங்கியது. செஞ்சி கோட்டையை, கி.பி., 1190 முதல் ஆனந்தகோனும், கி.பி., 1240 முதல் கிருஷ்ணகோனும், கி.பி., 1270 முதல் கோனேரிக்கோனும், அதன்பின் அவரது வாரிசுகள் கோவிந்தகோன், வலியகோன், கோட்டியலிங்ககோன் ஆகியோர் தொடர்ச்சியாக ஆண்ட நீண்ட வரலாறு உடையது.
அதன்பின், விஜயநகர நாயக்கர்கள், மராட்டியர், முகலாயர், ஆற்காடு நவாப்புகள், பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என, மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். நாயக்க மன்னரிடமிருந்து செஞ்சியை, பீஜப்பூர் சுல்தான் கி.பி., 1679-ல் கைப்பற்றினார். 28 ஆண்டுகள் பிஜப்பூர் சுல்தான் ஆட்சிக்கு பின், 1677-ல் மராத்திய மன்னர் சிவாஜி செஞ்சிக் கோட்டையை கைப்பற்றி, தன்னுடைய அரசுடன் இணைத்துக் கொண்டார்.
அதன்பிறகும் செஞ்சிக்கோட்டை பல்வேறு ஆளுமையின் கீழ் இருந்தது. இதில், மராத்தியர்கள் செஞ்சி கோட்டையை ஆண்டது, 22 ஆண்டுகள் தான். இதில், மராத்தியர்கள் செஞ்சி கோட்டையில் வலுவான கட்டுமானங்கள் செய்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை. மராத்தியரை விட செஞ்சி கோட்டையை நாயக்கர், ஆற்காடு நவாப், பீஜப்பூர் சுல்தான், முகலாயர், ஆங்கிலேயர் ஆகியோர் அதிக ஆண்டுகள் ஆண்டாலும், அந்த கோட்டை தமிழ் மன்னராகிய கோனேரிக்கோனுக்கு சொந்தமானது என்பதே. வரலாற்றில் பதிய வேண்டும்.

செஞ்சி பகுதியில் உள்ள குப்பம் கோனேரிகுப்பம் என்றும், கோட்டை தேசிங்குராஜா கோட்டை என்றும் அழைப்பதையும் அமைதியாக அனுமதித்தன் விளைவு, மராத்தியர்களுக்கு சொந்தமானது என்ற நிலை வந்துள்ளது. தமிழர் வரலாற்றை இழிவுபடுத்தி, நமது கோட்டையை அயலாரின் கோட்டை என்பதை அடையாளப்படுத்துவதை, அரசு எப்படி அனுமதிக்கிறது. இதற்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருப்பதும் வெட்கக்கேடானது.
மஹாராஷ்டிர மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து முன்னெடுக்கும் கூட்டுச்சதிக்கு, தமிழக அரசு துணை போவது, தமிழர்களுக்கு இழைத்துள்ள பச்சைத்துரோகம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.