
மதுரை: தொல்லியல் கழகம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் தொல்லியல் கழகத்தின் 33-வது ஆண்டுக் கருத்தரங்கம், 35-வது ஆவணம் இதழ் மற்றும் கல்வெட்டு அறிஞர் ராசகோபால் பவளவிழா மலர் திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா மதுரை காமராஜர் சாலையிலுள்ள தனியார் மஹாலில் நடந்தது. நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று திசையாயிரம் நூலை வெளியிட்டார்.
விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: “தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஏதாவது ஒரு பட்ஜெட்டில் ஒரு துண்டு விழுந்தால் உடனே கை வைக்கும் துறை தொல்லியல் தான் என ஒரு காலத்தில் இருந்தது. இந்த உண்மை பலருக்கும் தெரியும். அந்த காலம் மாறி நிதி அமைச்சராகவும், தொல்லியல் அமைச்சராகவும் இருக்கும் காரணத்தினால் நான் இந்த நிகழ்வில் நேரத்தை வேண்டுமானாலும் குறைப்பேனே தவிர, இத்துறையில் நிதி ஒதுக்கீட்டை குறைக்காத நிதி அமைச்சராக இருப்பேன் என்ற உறுதிமொழியை தெரிவிக்க விரும்புகிறேன்.