
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கவனம் ஈர்த்து, தமிழ், கன்னடம் என அடுத்தடுத்து ரீமேக் ஆகியது.
முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகமும் வந்திருந்தது.
தற்போது மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பும் கூடிய விரைவில் தொடங்கவிருக்கிறது.
இப்படத்தின் திரைக்கதை வேலைகள் குறித்து சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசியிருக்கிறார்.
கேரளாவில், நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் ஜீத்து ஜோசப், “நேற்று இரவுதான் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை எழுதி முடித்தேன்.
நான் நீண்ட நாட்களாக அதீத அழுத்தத்தை எதிர்கொண்டு வந்திருக்கிறேன். நான் இப்போது ‘மிராஜ்’, ‘வலது வசந்தே கள்ளம்’ என இரண்டு படங்களை இயக்கி வருகிறேன்.

இப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு இடையேதான் ‘த்ரிஷ்யம் 3’ திரைக்கதை வேலைகளைக் கவனித்தேன். தினமும் காலை 3.30 மணிக்கு எழுந்து எழுதத் தொடங்குவேன்.
அந்த நாட்களிலெல்லாம் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சவால்களை எதிர்கொண்டேன். நேற்று இரவு க்ளைமேக்ஸ் எழுதி முடித்ததும்தான் நான் ரிலாக்ஸாக உணர்ந்தேன்.” எனக் கூறியிருக்கிறார்.