
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டி பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் போராட்டம் நடந்திருந்தது. அதில், திமுக அரசுக்கு எதிராக அன்புமணி கடுமையாக கொந்தளித்திருக்கிறார்.
அன்புமணி பேசியதாவது, ‘தமிழகத்தின் தனிப்பெரும் சமுதாயம் வன்னிய சமுதாயம். இந்த சமுதாயம் பின் தங்கிய நிலையிலிருந்தும் இதை முன்னேற்ற ஸ்டாலின் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஸ்டாலினுக்கு வன்னியர்களின் வாக்கு மட்டும் வேண்டும். ஆனால், வன்னியர்கள் படிக்கக்கூடாது, முன்னேறக்கூடாது. சுயமரியாதையோடு வாழக்கூடாது.
உச்சநீதிமன்ற தீர்ப்பளித்து 1208 நாட்கள் ஆகிவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திதான் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லவில்லை. தரவுகளின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்துங்கள் என்றுதான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உங்களுக்கு வன்னிய மக்களை கணக்கெடுக்க அதிகாரம் இல்லையா? கர்நாடகா, தெலுங்கானா, பீகாரிலெல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறார்களே? ஸ்டாலின் அவர்களே உடனடியாக வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்குங்கள்.

ஸ்டாலினுக்கும் சமூகநீதிக்கும் எள்ளளவும் சம்பந்தம் கிடையாது. வன்னியர்கள் முன்னேறக்கூடாது என்கிற ஆணவத்தில் ஸ்டாலின் இருக்கிறார். வன்னியர்களின் ஒரு வாக்கு கூட திமுகவுக்கு செல்லக்கூடாது.
மகாத்மா காந்தி இந்தியா வந்து 32 ஆண்டுகளில் சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால், ராமதாஸ் அய்யா 45 ஆண்டுகள் போராடியும் நமக்கு விடுதலை கிடைக்கவில்லை.
திமுகவில் 23 எம்.எல்.ஏக்கள், 5 எம்.பிக்கள் வன்னியர்கள். இவர்களில் யாராவது ஒருவர் இட ஒதுக்கீடு வேண்டி முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறீர்களா? கட்சி வேறுபாடின்றி சட்டமன்றத்தில் ஒட்டுமொத்தமாக 38 வன்னிய எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால்தான் சட்டமன்றத்துக்குள் செல்வோம் என இவர்களால் போராட முடியுமா? நீங்கள் அந்த நிலையை உருவாக்குங்கள்.
உங்கள் தொகுதியில் உங்கள் எம்.எல்.ஏ க்களுக்கு அழுத்தம் கொடுங்கள். ஸ்டாலின் அரசு அளவுக்கு வன்னியர்களுக்கு துரோகம் செய்த அரசு வேறில்லை. இட ஒதுக்கீடு கொடுக்கவில்லையென்றால் அடுத்தக்கட்டமாக சிறை நிரப்பும் போராட்டத்தையும் சாலை மறியலையும் நடத்துவோம்.’ என்றார்.