• July 20, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூராகும். லட்சுமி தேவியின் அம்சம் ஆகிய ஸ்ரீஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி, பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான். இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியை பரத்வாஜ் பட்டர் ஏற்றிவைத்தார்.

ஆண்டாள் கோயில் கொடியேற்றம்

இந்த ஆடிப்பூர விழாவில் ஐந்தாம் திருநாள் 24ஆம் தேதி கருட சேவையும், 26ஆம் தேதி சயன சேவையும் நடைபெறும். முக்கிய நிகழ்வான திரு ஆடிப்பூர தேரோட்டம் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

திருவிழா நடைபெறும் எட்டு நாள்களும் ஆண்டாளும், ரங்க மன்னாரும் பதினாறு வண்டிச் சப்பரம், ஐந்து வருட சேவை, தங்க பல்லக்கு, சேஷவாகனம், பெரிய அன்ன வாகனம், சிம்ம வாகனம், கண்ணாடி சப்பரம், பூ பல்லாக்கு போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

பட்டர்கள் மற்றும் பரிசாகர்கள் இடையில் வாக்குவாதம்

முன்னதாக இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் கொடி மரத்தில் மீது ஏறி நின்று கொடி பட்டத்தை கொடிமரத்தில் சுற்றுவது தொடர்பாக பட்டர்கள் மற்றும் பரிசாகர்கள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பேச்சு வார்த்தைக்கு பின் கொடிமரத்தில் புல் கட்டுகள் வைத்து கொடி பட்டம் சுற்றப்பட்டு, கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் ரங்க மன்னாரை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *