
வழக்கை நுட்பமாகக் கையாளும் தன்மை இருந்தாலும் தன்னுடைய கடந்த காலத்தில் நிகழ்ந்த சில விஷயங்களால் வழக்குகளை எடுத்து வாதாடாமல் நீதிமன்றத்திற்கு வெளியே நோட்டரி பப்ளிக்காக இருக்கிறார் சுந்தர மூர்த்தி (சரவணன்).
சுற்றி இருப்பவர்களும், அவரின் குடும்பத்தினரும் தோல்வியுற்ற வழக்கறிஞர் என அவரைத் தூற்றுகிறார்கள். அது அவரை பாதிக்கிறது. அந்த நேரத்தில் நீதிமன்றத்தில் யாரிடமாவது ஜூனியராகச் சேர்ந்துவிடவேண்டும் என ஆர்வத்துடன் இருக்கிறார் அருணா (நம்ரிதா). ஆனால், எவரும் அருணாவை ஜூனியராக சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை.
சுந்தர மூர்த்தியின் திறமையை அறிந்து அவரிடம் ஜூனியராக சேர்ந்துவிட நினைக்கிறார் அருணா. ஒரு நாள் நீதிமன்ற வளாகத்திற்குள் தனக்கு தக்க நீதி கிடைக்கவில்லை என குப்புசாமி (சண்முகம்) தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்கிறார்.
பிறகு, குப்புசாமிக்கு நீதியைப் பெற்று தர முடிவு செய்து பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்கிறார்.
இந்த வழக்கில் சுந்தர மூர்த்தியிடம் ஜூனியராக சேர்கிறார் அருணா. இந்த வழக்கை சுந்தர மூர்த்தி எப்படி கையாள்கிறார்? குப்புசாமியின் கதை என்ன? என இவர்கள் இருவரும் அலசுவதே ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த ‘சட்டமும் நீதியும்’ தொடரின் கதை.
வழக்கு விசாரணை, சுந்தர மூர்த்தி சந்திக்கும் அவமானம், குப்புசாமியின் பக்கம் என ஏழு எபிசோடுகளாக இந்த சீரிஸை விரித்திருக்கிறார்கள்.
தோல்வியால் அவமானத்தின் உச்சத்திற்குச் சென்று தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபிக்கும் கதாபாத்திரத்திற்கு முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்து ஆழம் சேர்த்திருக்கிறார் சரவணன்.
ஓரிரு இடங்களில் காட்சி போகிற போக்கில் இவர் செய்யும் நய்யாண்டிகளும் தனியாக கவனம் ஈர்த்து ரசிக்க வைக்கின்றன. அதுபோல, முதன்மை கதாபாத்திரம் என்ற பொறுப்பை உணர்ந்து சீரிஸை தனியாளாகத் தாங்கிப் பிடித்திருப்பது வாவ் மொமன்ட் சித்தப்பு!

சீனியருக்கு தக்க உறுதுணையாக வரும் நடிகை நம்ரிதா நல்லதொரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இருப்பினும், ஆங்காங்கே தென்படும் அந்த ஓவர்டூகளைத் தவிர்த்திருக்கலாம்.
வெண்ணிலாவாக இனியா ராம், வள்ளியாக விஜயஶ்ரீ, குப்புசாமியாக சண்முகம் ஆகியோர் நடிப்பில் எந்தக் குறையும் இல்லை. இவர்களைத் தாண்டி, சீரிஸில் நடித்திருக்கும் ஒரு டஜன் புதுமுக நடிகர்கள் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் நடிப்பை வெளிப்படுத்தாமல் வந்து செல்கிறார்கள்.
நீதிமன்றம், காவல் நிலையம் என வழக்கிற்காக அலைந்து திரியும் சுந்தரமூர்த்தி மற்றும் அவரின் ஜூனியரை ஒளிப்பதிவாளர் கோகுல கிருஷ்ணனும் பின் தொடர்ந்து சுந்தர மூர்த்தியுடன் நம்மையும் அதே ஆர்வத்துடனும், துடிப்புடனும் பயணிக்க வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு எபிசோடையும் முடிந்தவரை தேவைக்கேற்ப மிக சுருக்கமாகவே கத்தரித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராவணன். அதுபோல, நான்-லினியர் கதை வடிவத்தையும் தெளிவுடன் அடுக்கடுக்காக கோத்து கதை சொல்லியிருக்கிறார்.

இருப்பினும், இடைப்பட்ட எபிசோடுகளில் அந்த ஷார்ப்னெஸ் மிஸ்ஸிங்! நீதிமன்ற விசாரணை, காவல் துறையினருடனான மோதல், தோல்வியுற்ற வழக்கறிஞரின் அன்றாட வாழ்க்கை எனக் காட்சிகளுக்கு விபின் பாஸ்கரின் பின்னணி இசை பலம் சேர்கின்றன.
நெருக்கடியான சூழலுக்குத் தேவைப்படும் பின்னணி இசையிலும் சிறிது கவனம் காட்டியிருக்கலாம். பாடல்களில் டைட்டில் டிராக், க்ளைமேக்ஸ் எமோஷனல் பாடல் குட் ரகம்!
இதுவரை நாம் சினிமா களத்தில் பெரிதும் பார்த்திடாத நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரின் அன்றாட வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறார் திரைக்கதையாசிரியர் சூர்யா பிரதாப்.
தோல்வியுற்ற வழக்கறிஞரின் பக்கம், புதிய வழக்கறிஞரின் பக்கம் என சீரிஸ், கதாபாத்திரங்கள் குறித்தான விவரிப்பைக் கொடுத்து கதைக்குள் நகரத் தொடங்குகிறது. ஆனால், இந்த கோர்ட் ரூம் டிராமாவுக்கு தேவையான புதுமையும் நுட்பமும் இல்லாதது உன்னிப்பாகப் பார்க்க வைக்கும் சுவாரஸ்யத்தைத் தள்ளுபடி செய்திருக்கிறது.
சுந்தர மூர்த்தியை ஏன் தோல்வியுற்ற வழக்கறிஞர் என அவமானப்படுத்துகிறார்கள் என்ற கேள்விக்குச் சொல்லியிருக்கும் காரணத்திலும் அடர்த்தியில்லை. தந்தை-மகளுக்கு இடையேயான எமோஷனல் காட்சிகளிலும் செயற்கைதனங்கள்தான் எஞ்சி நிற்கின்றன.

இப்படியான அழுத்தமில்லாத எழுத்து க்ளைமேக்ஸ் ஏற்படுத்த வேண்டிய எமோஷனல் கனெக்டை காற்றில் பறக்கவிட்டு மிஸ் ஆக்கியிருக்கிறது.
இந்த கோர்ட் ரூம் டிராமாவை இறுக்கமான முடிச்சுகளுடன் கொண்டு செல்வதற்கான களமிருந்தும் ஆழமில்லாத பின்கதைகளால் அதை வீணடித்து, சீரிஸை டல் அடிக்க வைத்திருக்கிறார் திரைக்கதையாசிரியர்.
புதுமுக நடிகர்களிடமிருந்து இயக்குநர் தேவையான நடிப்பை பெறாததும் பெரும் தடைக்கல்!
சண்முகம் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் தீக்குளித்து இறந்த செய்தியை அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருக்குத் தெரிந்தவர்கள், நீண்ட நாட்களுக்கு அதைப் பற்றி அறியாமல் ஷாக் காட்டுவது என்ன லாஜிக் மை லார்ட்!

அதுபோல, வெண்ணிலாவின் வாழ்க்கை எதனால், எப்படி தடம் புரண்டது என்பதற்கு தெளிவான விளக்கங்களும் மிஸ்ஸிங்!
ஏற்கெனவே, அடுக்கடுக்கான செயற்கைதனங்களால் அயர்ச்சியில் நம்மை மூழ்கடித்திருக்கும் வேளையில், பழைய அலமாரியிலிருந்து தூசி தட்டி எடுத்து ட்விஸ்ட் என பரிமாறுவது நம்மை சோதிக்கும் எலமென்ட்டுகள்! ஆழமில்லாத வசனங்களும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை
தெளிவான பின்கதைகள், அடர்த்தியான எழுத்தும் இருந்திருந்தால் இந்த சீரிஸுக்கு இன்னும் கைதட்டல் கிடைத்திருக்கும்.