
புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த கூட்டத் தொடரில் பாஜக அரசுக்கு எதிராக செயல்படுவது குறித்து இண்டியா கூட்டணி கட்சிகள் நேற்று தீவிர ஆலோசனை நடத்தின. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்றன. இண்டியா கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த ஆம் ஆத்மி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கடந்த 2024 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திரிணமூல், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.