
சென்னை: “பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல. பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம் என்பதை திமுகவின் தோழமை கட்சிகளும் மக்களும் அறிவார்கள்” என தமிழக அமைச்சரும், திமுக மூத்த நிர்வாகியுமான கே.என்.நேரு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை அரங்கேற்றி நெட்டிசன்களுக்கு ட்ரோல் மெட்டிரியல் ஆகிக் கொண்டிருக்கிறார். ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பைத் தயவு செய்து மாற்றிவிடுங்கள் பழனிசாமி. ’சம்பந்தியை மீட்டோம்; சம்பாதித்த பணத்தைக் காப்போம்’, ’மக்களை மறப்போம்; தமிழ்நாட்டை விற்போம்’, ’மகனைக் காப்போம்; சம்பந்தியை மீட்போம்’ எனத் தலைப்பை மாற்றிக் கொண்டு பழனிசாமி, பாஜக அடிமை பயணத்தைத் தொடங்கலாம்.