
இந்தியாவில் 2016-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத ஐ.சி.சி தொடர்.
தோனி கேப்டனாக விளையாடிய கடைசி ஐ.சி.சி தொடரான அதில், வங்கதேசத்துக்கெதிரான ஆட்டத்தில் கடைசி 1 பந்தில் 2 ரன்கள் எடுத்தால் அவர்கள் வெற்றி என்ற பரபரப்பான சூழலில், முஸ்தாபிஜூர் ரஹ்மானை தோனி ரன் அவுட் ஆக்கி இந்திய அணியை வெற்றி பெறவைத்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அதேசமயம், வெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 192 ரன்கள் அடித்தும் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்ததையும் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
அந்தப் போட்டியில், 20 பந்துகளில் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி என 43 ரன்கள் அடித்து அதிரடி காட்டிய ஆண்ட்ரே ரஸல், கடந்த சில நாள்களுக்கு முன்புதான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், 2016 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கெதிரான அரையிறுதிதான் தன்னுடைய கிரிக்கெட் கரியரின் பெஸ்ட் மொமெண்ட் என ஆண்ட்ரே ரஸல் கூறியிருக்கிறார்.
வெஸ்ட் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட நேர்காணலில் பேசிய ஆண்ட்ரே ரஸல், “நிச்சயமாக 2016 அரையிறுதி என்னுடைய கரியர் பெஸ்ட் மொமென்ட். இந்தியாவுக்கெதிரான அப்போட்டியில் லெண்டில் சிம்மன்ஸுடன் இணைந்து வெற்றிக்குக் கொண்டுசென்றேன்.
190 ரன்களுக்கு மேலான அந்த சேஸிங்கில், ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்திய அணியை சப்போர்ட் செய்தனர். அது கொஞ்சம் அழுத்தமாக இருந்தது.

ஆனால், பிட்ச் மற்றும் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த நம்பிக்கை ஆகியவை நான் செய்ய வேண்டியதைச் சுதந்திரமாகச் செய்யும் நம்பிக்கையை எனக்கு அளித்தது.” என்று கூறினார்.
அந்த அரையிறுதிப் போட்டிக்குப் பின்னர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட வெஸ்ட் அணி, கடைசி ஓவரில் கார்லஸ் பிராத்வெயிட்டின் தொடர்ச்சியான நான்கு சிக்ஸர்களால் உலகக் கோப்பையை வென்றது.
அதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக வென்ற ஐ.சி.சி கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…