
தமிழ்நாடு அரசின் ரப்பர் கழகத்தால் நிர்வகிக்கப்படும் ரப்பர் தோட்டங்கள் பெரும்பாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளன.
கீரிப்பாறை, மணலோடை, பரளியாறு, காளிகேசம், சிற்றார், மருதம்பாறை, குற்றியார், கோதையார் உள்ளிட்ட இடங்களில் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இவற்றில் கீரிப்பாறையில் அரசு ரப்பர் தொழிற்கூடம் அமைந்துள்ளது.
இந்த ரப்பர் தோட்டங்களில், ரப்பர் பால் உற்பத்தி, பதப்படுத்துதல் போன்ற பணிகளை அரசு ரப்பர் கழகம் மேற்கொள்கிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு பணிபுரிகின்றனர்.
இந்தத் தொழிலாளர்கள், பணி நிரந்தரம், விடுமுறை ஊதியம், ஊதிய உயர்வு மற்றும் இதர கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம், போராட்டம் ஆகியவற்றில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில், அங்கு அரசு ரப்பர் தோட்டம் கழக இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கும் IFS அதிகாரி என். சதீஷ், தொழிலாளர்கள் பிரச்னை மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து நேரடி கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், குமரி எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன் என். சதீஷின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறது.
இது குறித்து குமரி எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் M. ஜோசப் ஜெரால்டு தனது அறிக்கையில், “அரசு ரப்பர் தோட்டம் ஆரம்பித்த நாள் முதல் என் நினைவுக்கு எட்டிய வரை எந்த நிர்வாக இயக்குநரும் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்க எங்களை (தொழிற்சங்கங்களை) அழைத்ததில்லை.
இயக்குநர் என். சதீஷ் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மீது காட்டுகின்ற கனிவு, அன்பு, பாசம், நேசம், அக்கறையைக் கண்டு எங்களது மனம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இயக்குநருக்கு அனைத்து கோட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சார்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.