
கொடைக்கானலுக்குக் கீழே பல கிலோ மீட்டர்கள் தாழ்வான மலைக்கிராமம் வெள்ள கெவி. சாலை மற்றும் மருத்துவமனை வசதி இல்லாத அங்கே வாழும் மலைவாழ் மக்களில் மலையன் (ஆதவன்) துணிவும் உடலுரமும் மிக்கவன். அவனுடைய மனைவி மந்தாரை (ஷீலா) நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறார். உள்ளூர் போலீஸ் எஸ்.ஐ, மலையன் மீது மலையளவு வன்மத்தை வளர்த்துக்கொண்டு பழிவாங்கக் காத்திருக்கிறார். விடிந்தால் தேர்தல் என்கிற சூழ்நிலையில் காட்டுக்குள் எஸ்.ஐ குழுவிடம் சிக்கி மலையன் சின்னாபின்னமாக, இன்னொரு பக்கம், பிரசவ வலியால் துடிக்கும் மந்தாரையைத் தொட்டில் கட்டித் தூக்கிக் கொண்டு கிராம வாசிகள் மலையிறங்குகிறார்கள். கொலைவெறித் தாக்குதலில் சிக்கிய மலையன் உயிர் பிழைத்தாரா? மந்தாரையின் தலைப் பிரசவம் என்னவானது என்பது கதை.
ஓட்டுப் போட்டும் அடிப்படை வாழ்வாதார வசதியைப் பெற முடியாத சிக்கலான மலைக்கிராமம் ஒன்றின் வாழ்வா – சாவா போராட்டத்தை ரத்தமும் கண்ணீரும் வழிந்தோடும் சர்வைவல் த்ரில்லராகக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன். கெவி போன்ற சாலை வசதியற்ற மலைக் கிராமங்களுக்குப் பகலே பெரும் போராட்டமாக இருக்கும்போது, ஒவ்வொரு இரவும் அவர்களுக்கு எவ்வளவு பெரிய சவால் என்பதை உணர்த்தும் விதமாக, கதையின் இரண்டு முக்கிய நகர்வுகளை இரவில் அமைத்திருப்பது பார்வையாளர்களைப் பெரிய மன அழுத்தத்துக்குள் தள்ளி விடுகிறது.
ஓட்டுக்கேட்டு வரும் சிட்டிங் எம்.எல்.ஏ., அவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் போலீஸ் ஆகிய இரண்டு தரப்பும், அதிகாரமற்ற சாமானிய மக்களை எப்படிப் பார்க்கிறார்கள், அவர்கள் கேள்வி கேட்டால் எப்படி நடத்துவார்கள் என்பதைச் சித்தரித்த விதமும் அதிலிருந்து முளைக்கும் மைய முரணும் அழுத்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. உடல் பருமன் கொண்டவர்களின் உள்ளத்தைக் கவுரவம் செய்திருக்கும் துணைக் கதாபாத்திரம் ஒன்றை மிகச் சிக்கலான இடத்தில் இயல்பாகப் பொருத்தியதற்காகவே இயக்குநரைத் தனியாகப் பாராட்டலாம்.