• July 19, 2025
  • NewsEditor
  • 0

ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர், ஒரு பெரும் சமூகப் பின்னணியைக் கொண்டவர் என ஓ.பி.எஸ்ஸூக்கு எத்தனையோ வலுவான அடையாளங்கள் இருந்தாலும், இன்றைய தேதிக்கு அவர் அரசியலில் தன்னுடைய இடத்துக்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

ஜெயலலிதா- ஓபிஎஸ்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அரசியலில் பிடித்து ஏறுவதற்கு கிடைத்த பல படிகளையும் அவரே தட்டிவிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டார். சசிகலாவிடம் சரண்டர் ஆகிதான் எடப்பாடி முதலமைச்சர் ஆனார். ஆர்.கே.நகரில் டிடிவிக்காக பிரசாரம் செய்தார். ஆனால், சமயம் பார்த்து அவர்களையே கட்சியிலிருந்து வெளியேற்றி தன்னுடைய இருக்கையை பலப்படுத்திக் கொண்டார்.

பன்னீருக்கோ அந்த சூட்சுமம் போதவில்லை. ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டு விட்டுதான் ஜெயா சமாதியில் தர்ம யுத்தத்தையே தொடங்கினார். இபிஎஸ் உடன் இணைந்த பிறகும் பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவிதான் கிடைத்தது. கட்சியில் ஒருங்கிணைப்பாளராக பதவி கொடுத்தாலும் கூடவே இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியும் தன்னை முன்னிறுத்தி செக் வைத்துக் கொண்டே இருந்தார்.

இந்த இணைப்புக்கு பிறகும் ஓபிஎஸ்ஸூக்கு தன்னுடைய இடத்தை நிலைப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பொதுக்குழுவில் அவமதிக்கப்பட்டும் மீண்டும் கட்சியிலிருந்து அணியாக வெளியேறி அதிமுகவுக்கு உரிமைக் கோரினார். டெல்லியின் சப்போர்ட் இருப்பதால் தனக்கு சாதகமாக எதாவது நடந்துவிடும் என நம்பினார்.

எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா
எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா

டெல்லியின் காய் நகர்த்தல்களை மோப்பம் பிடித்த இபிஎஸ், யூடர்ன் அடித்து மீண்டும் பாஜக பக்கமாக வண்டியை திருப்பினார். அமித்ஷா எடப்பாடியோடு கைகுலுக்கினார். எப்படியாவது அமித் ஷாவை சந்தித்து நிலைமையை சரி செய்துவிடலாம் என்பது ஓபிஎஸ்ஸின் எண்ணம். ஆனால், சென்னை வந்த அமித் ஷா பன்னீர் செல்வத்துக்கு அப்பாயிண்ட்மெண்டே கொடுக்கவில்லை. அத்தோடு, எடப்பாடியோடு கைகோர்த்து, ‘அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் தலையிடமாட்டோம்.’ என பன்னீர் தலையில் இடியையும் இறக்கினார். பன்னீர் இறங்கி வந்தார்.

‘அதிமுகவில் இணைய எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.’ என்றார். எடப்பாடி அப்போதும் மசியவில்லை. வழி தெரியாமல் நிற்கும் ஓபிஎஸ் செப்டம்பர் 4 -ல் மதுரையில் மாநாடு கூட்டப்போவதாக அறிவித்திருக்கிறார். NDA வில் இருக்கிறீர்களா என்றால் ஆம் என சொல்லாமல் வித்தியாசமாகக் கதை உருட்டுகிறார்.

விஜய்க்கு எப்போதுமே தார்மீக ஆதரவு உண்டு என்றும் துண்டை போடுகிறார். என்ன முடிவில் இருக்கிறார் ஓபிஎஸ்? அல்லாடி நிற்கும் ஓபிஎஸ்ஸின் எதிர்காலம்தான் என்ன? என்று மூத்த பத்திரிகையர்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன், “ஓபிஎஸ்-க்கு இன்னமும் தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் இருக்க அவர் சார்ந்த சமுதாயமே மிக முக்கிய காரணம். சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் பலாப்பழம் சின்னத்தில்  போட்டியிட்டார்.

பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன்
பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன்

அந்தத் தேர்தலில்  கிட்டத்தட்ட 3 லட்சம்  ஓட்டுகளை அவரால் வாங்க முடிகிறது என்றால், அவருடைய சமுதாய ரீதியிலான முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடிகிறது.

அவர் பின்னால் யாரும் இல்லை என்று கூறிய எடப்பாடி தலைமையிலான அதிமுகவை அந்தத் தேர்தலில் டெபாசிட் இழக்க வைக்கின்ற அளவிற்கு அவருக்கு முக்கியத்துவம் இருந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

சட்டமன்றத்தேர்தல் என்றாலே போட்டிக் கடுமையாக இருக்கும். கடந்த தேர்தலிலேயே திமுக- அதிமுக இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக்குறைவுதான். இப்படியான சூழ்நிலையில் குறைந்தபட்சம் 5000 ஓட்டுகள் கூட ஒரு தொகுதியின் வெற்றியைத்  தீர்மானிக்கும். அந்தவகையில் நிச்சயமாக ஓபிஎஸ் ஒரு 30 லிருந்து 50 தொகுதிகள் வரைக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை அரசியல் புரிந்தவர்கள் மறுக்கமாட்டார்கள்.

அதனடிப்படையில் அவர் தன்னை அரசியலில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஏதோ ஒரு விதத்தில் அவர் களமாடதான் வேண்டும். இந்நிலையில், அவருக்கு  இருக்கும் வாய்ப்புகள் என்னவென்று பார்த்தால், அவருக்கு என்று  ஒரு அடையாளம் மற்றும் அமைப்பு இருக்க வேண்டும்.

ஒரு அணியில் போய் இணைய வேண்டும் என்றால் கூட ஒரு அமைப்பு நிச்சயம் தேவை. நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று ஓபிஎஸ் சொல்கிறார். 5 முதல் 10 இடங்கள் அவருக்கு கொடுக்கிறார்கள் என்றால் அந்த 5 இடங்களிலும் அவர் ஒரே சின்னத்தில் நிற்க வேண்டும் என்றால் கூட, ஒரு அமைப்பு தேவை. அப்படி சின்னம் இல்லையென்றால் தாமரையில் நில்லுங்கள் என்று சொல்லக்கூடிய ஒரு ஆபத்தும் இருக்கிறது. ஆனால்  அதனை ஓபிஎஸ் ரசிக்க மாட்டார். அவர் பின்னால் இருப்பவர்களும் ரசிக்க மாட்டார்கள்.

அதனால் தேர்தலுக்கு முன்பு அவர் ஒரு தனி கட்சியை ஆரம்பிப்பது, அந்தக் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நீடிக்க வைப்பது என்பது ஒரு ஆப்ஷன். கடைசி வரை எடப்பாடி அவரை அங்கீகரிக்கவில்லை என்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர் நீடிப்பதில் அர்த்தமே இல்லை. ஏன்னென்றால் தமிழகத்தில்  தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைவர் எடப்பாடிதான். ஓபிஎஸ் பேரைக் கூட சொல்லமாட்டேன் என்று சொல்லும் எடப்பாடி அணியில் ஓபிஎஸ் நின்றால் அது கேலி கூத்தாகி விடும்.

ஓபிஎஸ் – இபிஎஸ் – அதிமுக

இந்த சூழ்நிலையில் நிச்சயமாக அவர் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேதான் வருவார். எந்த நிபந்தனையும் இல்லாமல் நான் அதிமுகவில் இணைவேன் என்று ஓபிஎஸ் சொல்லி இருக்கிறார். இவ்வளவு சொன்னப்பிறகும் எடப்பாடி இவரை ஏற்க மறுத்தால் ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதில் அர்த்தமே இல்லை. அப்படி பார்த்தால் அவருக்கு இருக்கக்கூடிய ஒரு ஆப்ஷன் விஜய்தான்.

அதிமுக- பாஜக கூட்டணி உருவான பிறகும் கூட எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித்ஷா இதுவரைக்கும் சொல்லவில்லை. இதனால் அவர்களுக்குள் வேறு ஏதும் திட்டங்கள் இருக்கிறதா? அதனை எடப்பாடி ஏற்றுகொள்வாரா? அல்லது டிசம்பர் வாக்கில் இந்த அணி முறிந்து எடப்பாடி இந்தக் கூட்டணி வேண்டாம் என்று வெளியே வந்தால் எடப்பாடியும், விஜய்யும் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது. 

அந்த நிலையில் ஓபிஎஸ் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேளை இந்தக் கூட்டணி உடையவில்லை என்றால் விஜய்யுடன் சேரலாம். விஜய்யும் மறுத்துவிட்டால் தனியாக களம்கண்டு வேட்பாளர்களை முன் நிறுத்தலாம். ஒன்று தேசிய ஜனநாயகக்கூட்டணியில் தொடர்வது, இன்னொன்று எடப்பாடி ஏற்க மறுத்தால் தேசிய ஜனநாயகக்கூட்டணியை விட்டு வெளியே வந்து விஜய்யுடன் கூட்டணி வைப்பது.

ஓ.பன்னீர்செல்வம் - தவெக விஜய்
ஓ.பன்னீர்செல்வம் – தவெக விஜய்

அதுவும் இல்லை என்றால் கிட்டதட்ட 75 தொகுதிகள் வரை தனித்துபோட்டியிட வாய்ப்பு இருக்கிறது. அதில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் வேறு, தன்னுடைய அடையாளத்தை சுயமரியாதையைக் காப்பாற்றி கொள்வதற்கு கொஞ்சம் பண பலம் உள்ள எவர் ஒருவரும் இந்த மாதிரியான ஒரு முடிவைதான் எடுப்பார்கள். ஓபிஎஸும் அதனை எடுக்க தயங்க மாட்டார்” என்றார்.

தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். ஓபிஎஸ் குறித்து பேசிய அவர், “ஓபிஎஸ்ஸின்அரசியல் எதிர்காலம் கேள்வி குறியாகத்தான் இருக்கிறது. அவரின் செயல்பாடுகள் மூலம்தான் அவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும். ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்க வேண்டாம் என்று எடப்பாடி தெளிவாக இருக்கிறார்.

மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்
மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்

அதிமுக- பாஜக கூட்டணியில் ஒருவேளை பாஜக ஓபிஎஸ்ஸை இணைத்தாலும், அது கூட்டணிக்குள் நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தும். எனக்கு எந்தவிதமான பதவியும் வேண்டாம் அதிமுக வெற்றி பெறுவதற்காக வேண்டும் என்றால் நான் அதிமுகவில் இணைகிறேன் என்று ஓபிஎஸ் சொல்கிறார். ஆனால் அதனை எடப்பாடி பழனிசாமி புறக்கணிக்கிறார். அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் உழைத்தால் அதனால் பலன் பெறப்போவது எடப்பாடிதான்.

அதனால் எடப்பாடியை ஓபிஎஸ் பலமிழக்க செய்ய வேண்டும். அரசியல்ரீதியாக அவரை முறியடிக்க வேண்டும். அதற்கு அவர் தனிக்கட்சியை அமைப்பதுதான் சிறந்த வழி. அப்படி தனிக்கட்சி ஆரம்பித்து எடப்பாடி பக்கம் இருக்கும் நபர்களை தன்பக்கம் கொண்டுவர வேண்டும். அப்படி எடப்பாடி பலவீனமடைந்தால் தான் அவர் அதிமுகவின் ஒற்றுமையை பற்றி யோசிப்பார்.

இபிஎஸ், ஓபிஎஸ்
இபிஎஸ், ஓபிஎஸ்

பாஜகவை நம்பி எடப்பாடிக்கு எதிரான களத்தை ஓபிஎஸ் அமைக்கக்கூடாது. பாஜக அவருக்கு உதவாது. தேவையான நேரத்தில் பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறிந்துவிடுவார்கள். எடப்பாடியை பலவீனப்படுத்த அவர் விஜய்யின் தவெக-வில் இணைந்தாவது போட்டி போட வேண்டும். தேர்தல் நேரத்தில் சரியான கூட்டணியில் இணைந்து இவர் போராட வேண்டும். கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் ஓபிஎஸ் ஈடுபடவேண்டும்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *