• July 19, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: சர்க்கரை நோயை சித்த மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா? அது முழுமையான தீர்வாக அமையுமா அல்லது அலோபதி மருந்துகள் தான் எடுக்க வேண்டுமா?

-Fathima, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சித்த மருத்துவர்
விக்ரம்குமார்

சித்த மருத்துவத்தின் மூலம் சர்க்கரைநோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். சர்க்கரைநோய் என்பது வளர்சிதை மாற்றக் குறைபாடு. கணையத்தில் இன்சுலின் போதுமான அளவு சுரக்காவிட்டாலோ அல்லது அறவே சுரக்காவிட்டாலோ ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும். இதனால் தசைகளுக்கு சர்க்கரை போய்ச்சேராது. அதாவது சென்று சேர வேண்டிய தசைகளுக்கு சர்க்கரை போய்ச் சேராது.  சேரக்கூடாத ரத்தத்தில்  சர்க்கரை சேரும்.  இன்சுலின் ஹார்மோனின் செயல்திறனைத் தாண்டி உடலில் அதிகமாக சர்க்கரைச்சத்து உருவாவது அல்லது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை ஆற்றலாக மாற்ற இயலாத அளவு இன்சுலின் தனது செயல்திறனை இழப்பதையே  இரண்டாம்நிலை சர்க்கரைநோய் (டைப் 2 டயாபட்டீஸ்) என்கிறோம்.

டைப் 2 டயாபட்டீஸ் எனப்படும்  இரண்டாம்நிலை சர்க்கரைநோயை ஆரோக்கியமான உணவுகள் மூலமும் சித்த மருந்துகளின் மூலமும் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும். இன்னும் சொல்லப்போனால், சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யோகப் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் கணையத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக மாற்ற முடியும். ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் நிறைய நல்ல மருந்துகள் உள்ளன. அதே சமயம், ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில், ஒருங்கிணைந்த மருத்துவத்தை நாடுவதுதான் சிறந்தது.

டைப் 2 நீரிழிவு
நீரிழிவு

அதாவது கட்டுப்பாடற்ற ரத்தச் சர்க்கரைக்கு ஒருங்கிணைந்த மருத்துவத்தின் மூலம் தீர்வு கண்டு, ரத்தச் சர்க்கரை அளவு குறைந்ததும் சித்த மருந்துகளின் உதவியோடு அதைத் தக்கவைத்துக்கொள்ளலாம். எந்த மருத்துவம் மேற்கொண்டாலும், ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவருவதுதான் இலக்காக இருக்க வேண்டும். அது கட்டுக்குள் வந்துவிட்டாலே, வேறு பாதகங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

நாவல் பழத்தின் கொட்டையை உலர்த்திப் பொடித்துச் செய்யப்படுகிற நாவல்கொட்டை சூரணம், சர்க்கரைநோய்க்கு அற்புதமான மருந்து. இது நீரிழிவால் ஏற்படும் அதிக தாகத்தைக் குறைக்கும். அதன் துவர்ப்புச்சுவை காரணமாக, அதிக சிறுநீர் பிரிவதும் கட்டுப்படும்.

சுமார் ஏழு மூலிகைகள் சேர்ந்த ஆவாரை குடிநீர் சூரணம் சற்று துவர்ப்பாக இருக்கும். சித்த மருத்துவக் கோட்பாட்டின்படி, ரத்தச்சர்க்கரையைக் குறைக்க, இப்படி துவர்ப்புச்சுவை கொண்ட உணவுப்பொருள்களைக் கொடுப்பது வழக்கம். கை, கால் எரிச்சலையும் தடுக்கும்.

நாவல்பழம்

மதுமேகச் சூரணம் என்பது நீரிழிவைத் தடுக்கும் மிகச் சிறந்த மருந்து. இது எல்லா அரசு சித்த மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களில் கிடைக்கும்.  அதேபோல திரிபலா சூரணம், வில்வ மாத்திரை, சர்க்கரைக்கொல்லி இலையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து என எத்தனையோ உள்ளன. இவை தவிர்த்து வீட்டிலேயே பின்பற்றும் வெந்தயம் சாப்பிடுவது போன்ற விஷயங்களும் உதவும். ஆனால், அவை மட்டுமே முழுமையான தீர்வாகாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மருந்துகளோடு சேர்த்து கூடுதலாக இவற்றையும் பின்பற்றலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *