
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “75 வயதைக் கடக்கும் தலைவர்கள் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஓய்வுபெற வேண்டும்” என்று சமீபத்தில் கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது.
குறிப்பாக, பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் 17-ம் தேதியோடு 75 வயது நிறைவடைவதால், புதிய பிரதமரை பா.ஜ.க தேர்வுசெய்யுமா என்று எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த விவகாரத்தைக் கடந்த மக்களவைத் தேர்தலின்போதே கையிலெடுத்த எதிர்க்கட்சிகள், பா.ஜ.க தேர்தலில் வென்றாலும் ஒன்றரை வருடத்துக்குப் பிறகு புதிய பிரதமரை அவர்கள் தேர்வுசெய்வார்கள் என்று பிரசாரம் செய்தன.
ஆனால், அப்போதே அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள், 2029 வரை மோடிதான் பிரதமராக இருப்பார் என்று கூறிவந்தனர்.
இந்த நிலையில், 2029 தேர்தலில் பா.ஜ.க-வின் முகமாக மோடியை முன்னிறுத்தாவிட்டால் 150 இடங்களைக் கூட வெல்ல முடியாது என்று பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

தனியார் ஊடகத்துடனான நேர்காணலில் பேசிய நிஷிகாந்த் துபே, “அடுத்த 15 – 20 வருடங்களுக்கு மோடியை மட்டுமே பா.ஜ.க-வின் மையமாக நான் பார்க்கிறேன்.
2029 மக்களவைத் தேர்தலில் மோடியைத் தங்களின் முகமாக முன்னிறுத்தாவிட்டால் 150 இடங்களைக் கூட பா.ஜ.க-வால் வெல்ல முடியாது.
2029 தேர்தலில் மோடியை முன்னிறுத்தி போட்டியிடுவதைத் தவிர பா.ஜ.க-வுக்கு வேறு வழியில்லை.
மோடிக்கு பா.ஜ.க தேவை என்பதை விட, ஆட்சியில் இருப்பதற்கு பா.ஜ.க-வுக்கு மோடி தேவை என்பதால், இந்த வரம்பு (75 வயது) அவருக்குப் பொருந்தாது.” என்று கூறினார்.