• July 18, 2025
  • NewsEditor
  • 0

மத்திய பிரதேசத்தில் பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் நபரை அவர் பிடித்த பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் ரகோகர் என்ற இடத்தில் வசிப்பவர் தீபக் மகாபர். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் இவர் பல ஆண்டுகளாக பல கொடிய விஷப்பாம்புகளை பிடித்திருக்கிறார். தினமும் எங்காவது ஒரு இடத்தில் இருந்து பாம்பு பிடிக்க வருமாறு தீபக்கிற்கு அழைப்பு வந்து கொண்டுதான் இருக்கும். அங்குள்ள பர்பத்புரா என்ற இடத்தில் உள்ள வீட்டிற்குள் பாம்பு நுழைந்துவிட்டதாக தீபக்கிற்கு போன் வந்தது. உடனே தீபக் அங்கு விரைந்து சென்று லாகவமாகப் பாம்பைப் பிடித்தார்.

அந்நேரம் அவரின் மகனை பள்ளியில் இருந்து அழைத்து வரவேண்டிய நேரமாகிவிட்டது தெரிய வந்தது. உடனே அவசரமாக பாம்பை பைக்கில் எங்கு வைப்பது என்று தெரியாமல் அதனை தனது கழுத்தில் துண்டைப் போடுவது போன்று பாம்பை தன் கழுத்தில் சுற்றிப் போட்டுக்கொண்டு மகன் படிக்கும் பள்ளியை நோக்கிச் சென்றார். பள்ளியில் அவர் பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு நிற்பதை பார்த்த பெற்றோர் அதனை தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். அவர்களுக்கு தீபக் வீடியோ எடுக்க போஸ் கொடுத்தார். பின்னர் மகனை அழைத்துக்கொண்டு பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வரும்போது அவரை பாம்பு அவரது கையில் கடித்துவிட்டது. இதில் அவர் மயங்கி விழுந்தார்.

உடனே தீபக்கை அவரின் நண்பர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அங்கு முதல் கட்ட சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக குனா மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்தார். ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு இரவில் அவரது உடல் நிலை மீண்டும் மோசமடைந்தது. உடனே குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலையில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீபக் பாம்பு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். அவர் ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விட்டிருக்கிறார். பாம்பு பிடிக்க அவர் ஒருபோதும் பணம் வாங்கியதில்லை.

இதுகுறித்து தீபக்கின் நண்பர் கூறுகையில்,”பாம்பு இருப்பதாக யார் கூப்பிட்டாலும் உடனே சென்று அவற்றைப் பாதுகாப்பாகப் பிடித்து காட்டில் விடுவார். இம்முறை பாம்பை பிடித்துக்கொண்டு பைக்கில் வரும்போது பாம்பு கடித்துவிட்டது. மாலையில் அவரது உடல்நிலை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இரவில் மீண்டும் உடல்நிலை மோசமடைந்துவிட்டது. பாம்பு பிற்பகல் 12-1 மணிக்குள் கடித்தது. ஆனால் அவர் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு இறந்துவிட்டார்”என்று தெரிவித்தார். பாம்பை விளையாட்டாகக் கருதி கழுத்தில் போட்டுக்கொண்டு சென்று விபரீதத்தில் ஈடுபட்ட தீபக் தான் பிடித்த பாம்பு கடித்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *